Saturday, August 8, 2009

அவள்

மண்ணும் விண்ணும் மட்டுமல்ல
மனசும் பூச்சூடிய ஒரு இரவின் பாடல்.
அதை எப்படி ஆரம்பிப்பது ?
யார் எடுத்துத் தந்த அடியிலிருந்து ?
இல்லை எடுத்துச் செல்லுங்கள்
உங்கள் அதீத கற்பனைகளை.
மதுவும் விந்தும் ஊறிய சொற்க்களை.
கனவு வரை மண் தோய அவள்
இட்ட அடிகளில் உள்ளதே கவிதை.

அவள் பி.ஏ முடிக்கவில்லை என்றார்கள்.
அவள் காட்டில் என்றார்கள்
மேலும் அவள் ஒரு கெரிலா போராளி என்றார்கள்.
நானோ அவளை
கொழும்பு நகரத் தெருவில் பார்த்தேன்.
நான் உறைந்தது அச்சத்திலா ஆச்சரியத்திலா
அல்லது அவள் மீதான மதிப்பினிலா.
கோப்பிக் கடை மேசையுள் மறைத்தேன்
நடுங்கும் என் கால்களை.
அவள் அதே அமைதி ததும்பும் முகமும்
குருத்துச் சிரிப்புமாய்
முகவரி கேட்காதீர்கள் என்றாள்.

வாழ்வு புதிர்கள் போன்று
புத்தியால் அவிழ்க்கக் கூடியதல்லவே.
ஒரு பெண்
கண்ணகியும் பாஞ்சாலியும்போல
ஆண் கவிஞர் வடிவமைத்த படைப் பல்லவே.
காமம் தீராது எரியும் உடலுள்
எரியாத மனதின் தீயல்லவா காதல்.
ஒடுக்கப் படுகிறபோது மனசில் எரிகிறது
மற்றும் ஒரு தீ.
பல்கலைக் கழகச் சுவர்க் காட்டுள்
அவளும் அவனும் ஒரு சோடி ஆந்தைகளாய்
கண்படா திருந்த
காலங்களை நான் அறிவேன்.
அப்போதும் கூட
இன்னும் மூக்கைப் பொத்தினால்
வாய் திறக்கத் தெரியாத
அப்பாவிப் பாவமும் அபிநயமும் பூண்டு
ஒரு யாழ்ப்பாணப் பெட்டையாய்த் திரிந்தாள்.
பின்னர் நரகம் தலைமேல் இடிந்தது.
வெண் புறாக்களும்
வெண் புறாக்களை வரவேற்றவரும் மோதிய
88ன் குருதி மழை நாட்கள்.
முதல் குண்டு வெடித்ததுமே
நெஞ்செல்லாம் வன்புணற்ச்சி வெறியும்
உடலெல்லாம்
பெண்கள் இரத்தம் தோய்ந்த லிங்கமும்
கையில் துரு கனக்கும் றைபிளுமாய்
புறாக்கள் காக்கிக் கழுகான தெப்படி.
வரவேற்ற கரங்கள் ஏந்திய பூச்செண்டு
துப்பாக்கியானது எப்படி

மேன்மை தங்கிய பாதுசாவோ
டெல்கியில்.
அவரது கிரீடத்தை அணிந்தபடிக்கு
அவரது விதூசகன் ஒருவன் கொழும்பில்.
நமது கோபங்களை எடுத்து
விதி வனைந்து தந்த பீமனோ
கண் சிவக்க ஈச்சங் காட்டுக்குள்.
இவர்களிடை சிதறியது காலம்.
இவர்களிடை சிக்கி அழிந்தது
ஆயிரம் வருட நட்பின் வரலாறு.
சேறான பாதையில் சிதறியது ஒரு டாங்கி.
கீழே இரண்டு சீக்கியரின் பிணங்கள்.
தெருவில் போனவர் அடைக்கலம் புகுந்த
கோவிலுள் பாய்ந்தது துப்பாக்கி வேட்டு.
அவன் தரையில் சாய்ந்ததும்
அவள் சீக்கியன்மேலே அலறிப் பாய்ந்தும்
றைபிழைப் பற்றி முகத்தில் உமிழ்ந்ததும்
சுடடா என்னையும் என அதட்டியதும்
கண்டிலர் கண் இமைத்தவர்கள்.
என் தாய் மண்ணில் தலை குனிந்ததே
எனது கலாச்சாரத் தாயகம்.

யாருமே நம்பவில்லை.
அந்த அப்பாவிப் பெண்ணா ?
கேட்டு வாய் பிழந்தவர் எல்லாம்
கண்கள் பிழக்கக் கதறி அழுதனர்
விடை பெறு முன்னம்
அது அண்ணன் தம்பி சண்டை என்றாள்.
இருவரும் இளைத்தனர் தவறு என்றாள்
இருவரும் இன்னும் தவற்றை எண்ணி
மனம் வருந்தலையே என்கிறபோது
கண்ணும் மனமும் குரலும் கலங்கினாள்.
இருவரும் மீழ இணைவர் என்றாள்
தவிர்க் கொணாதது வரலாறென்றாள்.
தழைகள் அறுவதும் வரலா றென்றாள்.
பின்னர் விடைதரும்போது
கூந்தலை ஒதுக்கி நாணிச் சிரித்தாள்.
அவளைக் கண்டது மகிழ்ச்சி.
அவளுடன் பேச்சோ மேலும் மகிழ்ச்சி
பாதுகாப்பாய் விடை பெற்றதும் மகிழ்ச்சி.
அந்த இரவின் கனவும் மகிழ்ச்சி.
- வ.ஐ.ச.ஜெயபாலன்.

No comments:

Post a Comment