Thursday, August 27, 2009

துக்கம் விசாரிக்க வருவோருக்கு

நீங்கள் ஒருவேளை சமயம் வாய்க்கையில்
இப்படி ஒரு ரவுண்டு
வந்து விட்டுப் போங்கள்!

துணைக்கு கூட
ஒருஆள் இல்லாமல் தான்
நான் இங்கனம் குள்ளையே
சுத்திகிட்டு இருக்கேன்

மேம்போக்கா சும்மா
எட்டிப்பார்த்தாப்பிலே
தொட்டுக்கோ தொடச்சுக்கோன்னு
கூட ஒரு எட்டு
வந்துட்டு போயிடுங்களேன்.


உங்க கூட பேசுனாப்பிடியுமிருக்கும்
அப்பிடியே ஒரு தபா
பார்த்த மாதிரியுமிருக்கும்.


என்னடா எழவு கூப்பிட்டுக்கினே
கிடந்தானே.. தாயொலி
போயித் தொலையரதுக்குள்ளார
பார்த்தாவது தொலச்சம்னு இருக்கும்
எனக்குன்னு யார் இருக்கா
ஒலகத்துல உங்களைத் தவிர!


உங்களக் கூப்பிடாம நானு
யாரக் கூப்புடுவேன்- அப்புடியுமில்ல
நான்தா உங்கள வந்து பாக்கலாமின்னா
நீங்க பலசோலிக்காரங்க!
எங்க சுத்துரீங்களோ!
நேரா நேரத்துக்கு சாப்பிடரீங்களோ என்னமோ!
சித்த சாமி சாமியா இருப்பீங்க

நேரங் கெடைக்கறப்ப ஒரு நடை வந்துட்டுப் போயிடுங்க!

வந்து இன்னார்ன விசாரிச்சலே
சொல்லி உட்டுருவாங்க..
அந்த தாயோலியா..
அவன் அங்கனதான் கிடப்பான்னு!
-வா.மு. கோமு.

Monday, August 24, 2009

இதுதான் வாழ்வென்றால்...

ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன்
என்றார்.
எந்த ராமச்சந்திரன்
என்று நான்
கேட்கவுமில்லை, அவர்
சொல்லவுமில்லை
- நகுலன்.
நீங்கள்
நிலைத்திருக்க வேண்டுமெனில்
என்றென்றும் நீங்கள்
நினைவுகூரப்படவேண்டுமெனில்
ஒரேயொரு துரோகத்தைச் செய்யுங்கள்.

-முபாரக்.
மஞ்சள் வெய்யில்
பூ
காத‌ல்
ம‌ழை
ப‌ற‌வை
நீ
அல்ல‌து
நான
என்று எளிதாக‌
சொல்ல‌ முடிவ‌தில்லை.
ம‌ர‌ண‌த்தை.
-வா.மணிகண்டன்.
பாதையில் குடிசை
பளிங்குக் கோயில்
பாருக்குள்ளே நல்ல நாடு?

கண்ணகியா?
மாதவியா?
கற்பிழந்தவன் கோவலன்
-ம.ஞானசேகரன்.
வேறு
உலகச் சந்தையில்
ஒரு மனிதன் போனால்
இன்னொருவன்
உனக்கென்று
ஒரு லாப நஷ்டக்
கணக்கிருந்தால்
விஷயம் வேறு

வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!
- நகுலன்.
அப்பாவுக்கு அறுபதனாயிரம்
மனைவிகள் இருந்தும்
சந்தேகம் இல்லை,
ராமனுக்கு ஒரு மனைவி
ஆயிரம் சந்தேகங்கள்.
-கபிலன்.
தூரத்து அப்பா
குல்பி ஐஸ்காரனைக் கண்டு
கையாட்டிச் சிரிக்கிறது
வேலைக்காரியுடன்
ஒளிந்து விளையாடுகிறது
பக்கத்து வீட்டு அங்கிள் தோள் மீது
இரு கை போட்டேறி
உரிமையோடு
கண்ணாடியை இழுக்கிறது.
வீதியில் செல்வோரெல்லாம்
அந்நியோன்யமாய்..
வருட விடுமுறையில் வரும்
பாவப்பட்ட
அப்பா மட்டும்
அந்நியமாய்.
-எம்.சுதா முத்துலட்சுமி.
இருந்து என்ன
ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன
ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்.
- கல்யாண்ஜி
சுருதி
ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி / ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு

- நகுலன்.
வான பரியந்தம்
உயர்ந்த கோபுரத்தில்
ஏறி இல்லை என
கை விரித்து நிற்கிறது
சிலுவை.
-ராஜ சுந்தரராஜன்.
துண்டிப்பு

மழெ இல்லெ தண்ணி இல்லெ.
ஒரு திக்குல இருந்துங்
கடதாசி வரத்தும் இல்லெ

அடைக்கலாங் குருவிக்கு
கூடு கட்ட
என் வீடு சரிப்படலே

நான் ஒண்டியாதான் இருக்கேன்
இப்பவும்.
-ராஜ சுந்தரராஜன்.
அந்திக்கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.
-கலாப்ரியா
எங்கோ மலைப்பிரதேசத்தில்
ஒரு தோட்டக்காரனிடம்
கெஞ்சி வாங்கி வந்த திராட்சை செடி
பூக்கவும் இல்லை
காய்க்கவும் இல்லை
மாறாக
படரவிட்டிருக்கிறது
மலையடிவாரத்தை
எனது பால்கணியில்!
-தென்றல்.
கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்
ஆயினும் மனதிலே ஒரு நிம்மதி
-ஆத்மாநாம்.

Sunday, August 23, 2009

இருக்க நீர்வீழ்ச்சி நிமிரக்கடல் நீ..

மௌனமாய்ப் பிரிந்து செல்லல்...
விதி அதுவானால்,
கையைமீறியதென
நாம், பிரிந்துசெல்லலாம்.
ஆனால்
உனதுமௌனத்தில் புதைந்த உண்மைகள்
என்றைக்குமாய்க்
குழப்பத்தில் எனை ஆழ்த்தப்
பிரிந்துசென்றாய்;
இதுதான்,
சகிக்க முடியாதது!

-அறியப்படாதவர்கள் நினைவாக...!
அ. யேசுராசா

என்னவென்று
அடையாளப்படுத்த?

காலை
காலெறிந்து நடக்க
தளிர் நழுவி சிந்துகின்ற பனி

தொடரத்
தழுவி வழிகின்ற வெய்யில்

தழையக்கட்டிச் சிரிக்கையில்
தர்ப்பூசணி

குளிர்ந்து முத்தமிடத்
தென்னம் பாளையில் ஊறுகின்ற
கள்

கோபத்தில் தகிக்க
மலையிலிருந்து விழுகின்ற
சிறு கல்

இருக்க நீர்வீழ்ச்சி
நிமிரக்கடல்
நீ.
ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை
-செழியன்

பிரிவிற்கு பாலையென்று
திணை வகுத்தவன்
உண்மையில்
பேரறிஞனாய் இருக்க வேண்டும்

நீ இல்லாத போது
எனக்கு எந்த இடமும்
பாலையாகத் தான் தோன்றுகிறது

உள்ளும் புறமும்
வெப்பக்காற்றாய் சுழலும்
உன் நினைவுகள்

கண்களில் விழுந்த மணலாய்
உள்ளத்தில் உறுத்தலாய்
உன் உருவம்

அவ்வப்போது கானலாய்
தோன்றி மறையும்
உன் புன்னகை

எங்கேனும் உன்னைச்
சந்திக்க நேரும்போது
உதடுகள் உலர்ந்து...
நா வறண்டு..
வார்த்தைகளுக்காய் தவிக்கையில்...

நிச்சயமாய்த் தோன்றுகிறது
பாலை இத்தனை கொடுமையாய்
இருக்காது என்று!
- காயத்ரி.
உன்னிடம் பேசிவிட
எப்படியெல்லாம்
பிரயத்தனப்பட்டிருக்கிறேன் என்றும்,
ஒருமுறை பேச,
எத்தனை ஒத்திகையெல்லாம்
செய்திருக்கிறேன் என்றும்
உனக்கென்ன தெரியும்?

நேற்றைய எதேச்சையான சந்திப்பில்,
வெகு இயல்பாகப் பேசிவிட்டு
போய்விட்டாய்.
இனியென்ன செய்வது எனதிந்த
ஒத்திகை வார்த்தைகளை?
நேற்றுப்
பிற்பகல்
4.30
சுசீலா
வந்திருந்தாள்
கறுப்புப்
புள்ளிகள்
தாங்கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதே
விந்தை புன்முறுவல்
உன் கண் காண
வந்திருக்கிறேன்
போதுமா
என்று சொல்லி
விட்டுச் சென்றாள்
என் கண் முன்
நீல வெள்ளை
வளையங்கள்
மிதந்தன
- நகுலன்
எத்தனைப் பெண்கள்
கோலம் போட்டாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய விரல்கள் இல்லை

எத்தனைப் பெண்கள்
என்னைப் பார்த்தாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய கண்கள் இல்லை

எந்த நிழலிலும்
உன் ஆறுதல் இல்லை
எந்த வாழ்த்திலும்
உன் குரல் இல்லை

உனது கோலத்தில்
மையம் கொள்ளப்
பூத்திருக்கிறது பூசணி

உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது
விலைபோகாமல்
ஒரு பானை

நீராட நீ வராமல்
உறைந்து நிற்கிறது
நம் ஊர் நதி

நீதான்
சொல்லிக்கொள்ளாமலேயே
புறப்பட்டுவிட்டாய்

உனது ஊரிலாவது
கரும்புகள் இனித்தால்
ஒரு கடிதம் எழுது.
-பழனிபாரதி.
நீ மேல் உதடு
நான் கீழ் உதடு
நாம் மௌனமாகவே
பேசிக்கொள்வோம்

-இரமேஷ் விஸ்வநாதன்.
அணுஅணுவாய்
சாவதற்கு
வாழ்வதற்கு
முடிவெடுத்துவிட்ட பிறகு
காதல்
சரியான வழி தான்.
-அறிவுமதி.
தண்டவாளத்தில்
தலைசாய்த்துப் படுத்திருக்கும்
ஒற்றைப்பூஎன் காதல்.
நீ நடந்து வருகிறாயா?
ரயிலில் வருகிறாயா?
- பழனிபாரதி.
உன் முன்னால்
நானொரு
பிச்சைப் பாத்திரம்

படைப்பின் சாரம்
ஆண்
ஆணின் சாரம்
பெண்

காதல்
பழைய மது
நாம்
புதிய புட்டிகள்.
-அப்துல் ரகுமான்.

Saturday, August 15, 2009

கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்

என்னை மீண்டும்
இசைக்க வைக்க வந்துள்ளாய்;
உன்னை வரவேற்கிறேன்.
நான் மகரயாழ்
உன் மணிக்கரம்
தீண்டினால் போதும்

என்னால்
உனக்கு பெருமை வரும்;
உன்னால்
எனக்கு வாழ்வு வரும்.

உன்னை வரவேற்கிறேன்.

உனக்கென்ன-
ஒரு பார்வையை
வீசிவிட்டுப் போகிறாய்...
என் உள்ளமல்லவா,
வைகோலாய்ப்
பற்றி எரிகிறது.

உனக்கென்ன-
ஒரு புன்னகையைப்
உதிர்த்துவிட்டுப் போகிறாய்...
என் உயிரல்லவா,
மெழுகாய்
உருகி விழுகிறது.

உனக்கென்ன-
போகிறாய்...போகிறாய்...
என் ஆன்மாவல்லவா,
அனிச்சமாய்
உன் அடிகளில் மிதிபடுகிறது.

"மார்கழி மாதத்தில்
என் பிறந்த நாள் வரப்போகிறது"
என்று கூறிவிட்டுப் போகிறாய்.

உன் பிறந்ததினப் பரிசாகப்
ஒரு மானையோ மயிலையோ
கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்

என் பரிசு
உயிருள்ள பரிசாக
இருக்க வேண்டும்
என்று நினைக்கிறேன்
அடுத்த வினாடியே
அப்படிக் கொடுத்தால்
நீ என் மீது பொழியும்
அன்பு வெள்ளத்தில்
ஒரு துளியை
அந்த உயிரின் மீது
சிந்தி விடுவாயோ
என்று பயப்படுகிறேன்.

நான்
வெறுங்கையோடு வரத்
தீர்மானிக்கிறேன்.
நான் உனக்கு பூச் சூட்டுகிறேன்
நீ சிரிகிறாய்.

புதிதாய்
தானம் கொடுக்கப் புறப்பட்டவன்
ஆள் தெரியாமல்
கர்ணன் வீட்டுக்
கதவைத் தட்டுவதைப் போல்...

புதிதாய்ச்
சாற்றுக்கவி பாடப் பழகியவன்
அடையாளம் தெரியாமல்
கம்பன் தெருவில்
கால்வைப்பதைப் போல்.

நான் உனக்கு பூச் சூட்டுகிறேன்

பூங்கொடியே,
நீ சிரிக்காமல்
என்ன செய்வாய்?
-கவிஞர் மீரா.

அஞ்சுவண்ணம் தெரு

அஞ்சுவண்ணம் தெரு
-தோப்பில் முகம்மது மீரான்

சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் எழுதிய "அஞ்சுவண்ணம் தெரு" வாசிப்பில் ஒரு புதிய அனுபவத்தை உங்களுக்கு தரும். திருப்பங்கள் ஏதும் இல்லது சுவாரசியமான ஒரு குடும்பத்தின் கதையை மட்டும் அல்லாது அஞ்சுவண்ணம் தெரு என்ற ஒரு தெருவின் அனுபவங்களை நாவலாக தந்திருக்கிறார்,கூடவே தலைமுறை மாறும்போது ஏற்படும் முரண்பாடுகளையும் தெளிவாக வாசகன் புரியுமாறு தந்திருப்பது சிறப்பு.

முகமறியா ஒருவர் தன் வாப்பாவை பற்றி சொல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த நாவல்.இஸ்லாமிய பழக்கவழக்கங்களை அதன் மொழியிலே எழுதிஇருந்தாலும் அங்கங்கே அவற்றின் தமிழ் விளக்கங்களும் இருப்பதால் தடை இல்லாமல் படிக்கமுடிகிறது.

நபிஷா மன்ஜிலில் இருந்து தாருல் ஷகீனா (என்ன அழகான பெயர்)விற்கு குடிவரும் ஒரு குடும்பத்தின் கதை இது.அஞ்சுவண்ணம் தெரு-வில் உள்ள அத்தனை மனிதர்களை பற்றியும் அழகாக விவரித்திருக்கிறது இந்த நாவல்.அத்தனை மனிதர்களும் நம் மனதில் தங்கி விடுகிறார்கள்.எழுத்தின் அத்தனை சுவைகளையும் விரும்பி படிக்கும் அனைவரும் தவற விடாத புத்தகம் இந்த அஞ்சுவண்ணம் தெரு.
வாப்பா,மம்மதும்மா,குவாஜா அப்துல் லத்திப்ஹஜ்ரத்,என்று வரும் அனைவரும் வாழ்ந்து இருகிறார்கள் இந்த அஞ்சுவண்ணம் தெருவில்.கூடவே ஒரு சத்தியமுள்ள பாம்பும்,மருதுவான் மலை காற்றும் மற்றும் மகாமூதப்பா தைக்காப் பள்ளிவாசலும். யாருக்காக இல்லாவிட்டாலும் மைதீன் பிச்சை மோதீன்-காக படியுங்கள்.இந்த அஞ்சுவண்ணம் தெருவின் ஜீவன் அவர்.

படித்து முடிக்கையில் புதிய வாசிப்பின் அனுபவம் மட்டும் அல்லாது.சகலத்தையும் நேசிக்கும் மனிதர்களை இந்த அஞ்சுவண்ணம் தெருவில் நீங்கள் பார்த்திருப்பிர்கள்.
அஞ்சுவண்ணம் தெரு உங்கள் நெஞ்சில் நிறையும்.

"அஞ்சுவண்ணம் தெரு"
அடையாளம்,
1205/1 - கருப்பூர் சாலை.
புத்தாநத்தம்-621310
திருச்சி மாவட்டம்.
தொலைபேசி-௦04322 273444

விலை - 130.

தவறினால் நீ தறுதலை...

கடவுளுக்காக
மொட்டையடித்துக்
கொள்கிறான்
மனிதன்.......
மனிதனுக்காக
ஒரு மயிரையும்
இழக்கத் தயாராய் இல்லை
கடவுள்.
-பாரதி ஜிப்ரான்
புறப்படுகையில்
பூனை குறுக்கே!
சகுனம் பார்த்து
திரும்பும் நீ
மனிதனா?
சுண்டெலியா?
-கோவை.சதாசிவம்.
படி
வேலை தேடு
மணந்து கொள்
குழந்தை பெறு
குடும்பத்தோடு
சினிமாவுக்குப் போ
சொத்து சேர்
சுகமாயிரு
அடுத்தவனுக்காக
அலட்டிக் கொள்ளாதே
தவறினால்
நீ
தறுதலை.
-முகில்
இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க
பேருந்துக்கு வெளியே
பார்ப்பதாய்
பாசாங்கு செய்யும் நீ
என்னிடம்
எதை எதிர்பார்க்கிறாய்
காதலையா?
-சுகிர்தராணி.
‘நீரு’ என்கிற நீரஜா

கடல் ரொம்பவும் பிடித்துப்போனது
‘நீரு’வுக்கு.
அம்மா அதட்டிக்கொண்டே இருந்தால்
அலைகள் பெரிதென.

எதைப்பற்றியும் கவலையின்றி
தனக்குத் தெரிந்த நடன அசைவுகளை
நிகழ்த்திக்கொண்டே…
அலைகளோடு விளையாடிக்
கொண்டிருக்கிறாள்.

கணங்களை
அணு அணுவாய்க் கொண்டாட,
அவள் போல இருக்க வேண்டும்
அல்லது
அவளாகவேயிருக்க வேண்டும்
-யாரோ. என்ன வரம் வேண்டும்?
என்றார் கடவுள்.
அதுகூடத் தெரியாத
நீர் என்ன கடவுள்?
- கவிஞர் நீலமணி.

மறுபடி மறுபடி திசையற்றுப் போனோம்...

பின்னரும் நான் வந்தேன்,
நீ வந்திருக்கவில்லை
காத்திருந்தேன்...
அன்றைக்கு நீ வரவேயில்லை,
அப்புறம்
சுவாலை விட்டெரிகிற தீயொடு
தென்திசை நாட்கள் பெயர்ந்தன,
காலம் தாழ்த்தி
தெருவோரம் நாய் முகரக் கிடந்த
உன் மரணம் செவிப்பட்டது நண்ப,
துக்கமாய் சிரிக்கும் உன் முகம் நினைவில் வர
தொண்டை கட்டிப் போயிற்று...
எல்லாவற்றின் பொருட்டாயும் நெடுமூச்சே
”விதி” என்றாகிவிட்ட சுதந்திரத்துடன்
மறுபடி மறுபடி திசையற்றுப் போனோம்

-பா.அகிலன்
1990
நேற்று
அங்கும் இங்கும் பலர்
கொண்டுசெல்லப் பட்டனர்:
உனக்கும் எனக்குங்கூட
இது போல் நிகழலாம்.
திரும்பிவருவோமா?
மறுபடியும் நாளை
சூரியனைக்காண்போமா?
ஒன்றும் நிச்சயமில்லை,
எமதிருப்பு
'அவர்களின்' விருப்பில்

-அறியப்படாதவர்கள் நினைவாக...!
அ.யேசுராசா.

சொந்த நாட்டில்
அகதியாக
பதிவு செய்து கொண்டாயிற்று!

அடிக்கடி
சுற்றி வளைத்து
அடையாள அட்டை கேட்கப்படுகிறது.
சொந்த நாட்டில் வாழ்வதற்கு
உத்தரவாதமா அடையாள அட்டை?
வீதிக்கு வரும் போதும்,
தோள் கோர்த்துக்
காதலியுடன்-
சல்லாபிக்கும் போதும்
நடு இரவில்
மனைவியுடன் உறவு
கொள்ளும் போதும்
பத்திரப்படுத்த வேண்டியே உள்ளது
ஒரு அடையாளத்திற்காக...

ஷெல் விழும்; குண்டு தாக்கும்...
அடையாளம் காண கவனம் தேவை!
தொலைந்து விடாதே!
நண்பன் சொன்னான்.

'நண்பனே எனக்கு
உயிர் வாழ்வதற்கு
உத்தரவாதம் தா"
என்ற போது - ஒரு
கைக்குண்டைத்
தந்து சென்றான்!

-இசைக்குள் அடங்காத பாடல்கள்
முல்லை அமுதன்
.