Saturday, October 14, 2017

2 சைவரும் 1 சைவக்காரியும்


நீங்க சைவமா?
ம்..ம் . . . ஷைவப்பழம் நான்.
 நீங்க?

சைவம் சைவம் சுத்த சைவம்
 -சிக்கன் மட்டும் சாப்பிடுவேன். 

நீங்க எப்பிடி?
ஓமோம் நானும்
மீன் தலை சாப்பிடும்,
ஆட்டுக்குடல், மாட்டிறைச்சி சாப்பிடும்
செம்மறிக் கொழுப்பில வதக்கின நத்தை சாப்பிடும்
சைவக்காரி.

-ஆழியாள் .

கல் திறந்த கணம்


"பெயரழிந்த ஊர்
அரவமற்ற பிரகாரம்
கரையழியா சரவிளக்கு
திரியெரிந்து பிரகாசித்தது இருள்
காலடியோசைக்கு
சடசடத்துப் பறந்தது புறாக்கள்
எச்சம் வழிந்த முலையொன்றில்
எதேச்சையாய் விரல்பட்டுவிட
உறுத்துப் பார்த்தது
கருத்த சிலை
திகைப்புற்றுக் கண் திருப்ப
காதில் விழுந்தது
நூறு நூறு வருடங்கள் கடந்து
உளியின் ஒளி..."


 - க.மோகனரங்கன்.


விட்டு விடுதலையாகி


"குதிரையை லாயத்தில் கட்டு

கடிவாளம், கண்பட்டைகளை அகற்று
சற்றே ஓய்வு கொள்ளட்டும்...

நடந்து செல்

நாற்றிசையும் கூர்நது நோக்கு
மனிதர்களை,
விலங்குகளை,
புழு பூச்சிகளை,
பறவைகளை,
மரங்களை,
உறுமிச் செல்லும் வாகனங்களை
அன்பாய் கவனி...

அண்ணாந்து வான் நோக்கு...

அதிசயங்களில் மெய் மற.
குனிந்து பூமியை தரிசி;
ஏதேனும் பிடிபட்டால்
எடுத்துச் செல்
இல்லையேல்

உண்டுறங்கி ஓய்வு கொள்..."


- சின்ன கபாலி.

தியாகங்கள்

சிறையினிலே பிறந்ததனால் கிருஷ்ணன் என்றால்

சிலுவையிலே இறந்ததனால் யேசு என்றால்
போர்க்களத்து வார்த்தையெல்லாம் கீதையாகும்.
படுகொலைகள் அத்தனையும் யாகம் ஆகும்.
வாழுகிற நாள் முழுதும் சிறையில் வாடி
வேதனையால் உந்தன் உயிர் போனாற் கூட
ஏதுக்காய் எவருக்காய் என்ற கேள்வி
முன்னிற்கும் அவ்வேளை மக்கட்காக
நகமொன்றை இழந்தவனும் உன்னில் மேலாய்
உயர்வாதல் கூடும் அதை உணர்வாய், கேளாய்
சிலுவையிலே ஒரு யேசு சாய்ந்த போது
இரு கள்வர் அருகினிலே அறையப்பட்டார்.

-சி. சிவசேகரம்

"அக்கறையற்ற உனக்கு"


நினைக்காத வேறொன்று 

எல்லாம் சரியாய் அமைந்துவிட்டது இம்முறை.
புதுத்துணி, நளினமாய் செருப்பு, நகபூச்சு,
வேர்க்கடலை, அவித்த சோளமென
நினைத்ததெல்லாம் வாங்கிவிட்டோம்.
பேருந்தில் ஏறி ஆட்டோ பிடித்து
சிற்றுண்டி விடுதியில் உணவு முடித்து
வீடு திரும்பியதும் கவனித்தேன்
வாங்கிய புதுஜோடி செருப்பைக் காணவில்லை.

ஹோட்டலில் தான் தவற‌விட்டிருக்கவேண்டும்.
தொந்தி அழுந்த குனிந்துத் தேடிய முதலாளி
இல்லையேம்மா என்றார்.
தோசை சுடுப‌வ‌ரும், காபி ஆற்றுப‌வ‌ரும்,
பார்ச‌ல் க‌ட்டுப‌வ‌ரும் கூடி பேசிய‌ப‌டியிருந்தார்க‌ள்

கிடைக்க‌வேண்டுமென்று இருந்தால் கிடைக்குமென
நினைத்த‌ப‌டி வந்துவிட்டேன்.
ச‌ம்பாஷ‌ணைக‌ளில் கலந்துக்கொள்ளாம‌ல்
மேஜை துடைத்துக் கொண்டிருந்த‌வ‌ன்
அன்றிர‌வு க‌ன‌வில் வந்தான்.
 


- அனிதா



No comments:

Post a Comment