Thursday, February 25, 2010

காதலை கொல்லும் தேவை

இருவரும் விடைபெறுவோம்
பிரிவிற்காக ஒருவரிடமிருந்துஒருவர்
பிடுங்கியெடுத்த ஆதி காதலை
துர்ச்சகுணம் சூழும் இவ்விருளின்
குழிகளில் போட்டுப் புதைப்போம்

காதுகளுக்குள் குசுகுசுத்த
உன் குரலின் இனிய ரகசியங்களை
சிரிப்பை
வானத்தில் எறிந்து விட்டேன்

எஞ்சியுள்ள உனது பாடல்களை
ஸ்பரிசங்களை
மெல்லிய நுரை முட்டைகளாக
கானல் வெளியில்
மிதக்க விட்டிருக்கிறேன்
அடுப்புச் சாம்பலுக்குள் ஒளித்தாயிற்று
உடைத்த நினைவுச் சின்னங்களை

முதல் முதல் நீ தந்த கவிதையை
ஒரு பகலுணவாகச் சாப்பிட்டாகிவிட்டது
‘’எதுவுமில்லை அடையாளங்கள்’’
பாவனைகளோடு கொஞ்சிய முத்தம்
கண்களாகவும்
பெயர் சொல்லி அழைத்த கணங்கள்
நிறங்களாகவும் கொண்டொரு வண்ணத்துப் பூச்சி
நினைவெல்லாம் பறந்து திரிவதை
எப்படிக் கொல்வது
எனக்குச் சொல்லித் தா
- அனார்.

No comments:

Post a Comment