Saturday, February 27, 2010

அபிதா - லா.ச.ராமாமிருதம்.

"செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை."
பொருள் :
"பிரிந்து செல்லாத நிலைமையாக இருந்தால் எனக்கு சொல் .பிரிந்து சென்று விரைந்து வருதலைபற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்கு சொல் "

பிரிவாற்றாமை அதிகாரத்தில் வரும் முதல் குறள். தன் உண்மையான காதலை மறந்துவிட்டு ,காதலியிடம் சொல்லாமல் சென்ற ஒருவன் காலம் கடந்து தன் காதலியை தேடி வரும் கதையே "அபிதா" நாவலின் கதை.கால வேறுபாட்டில் அவன் சந்தித்த , சந்திக்கும் அனுபவங்களும், அதிர்ச்சிகளும் அதை சொல்லும் கதை நடையிலும் அபிதா சந்தேகமே இல்லாமல் காலம் கடந்தும் நிற்கும்.

லா.ச.ராமாமிருதம் அவர்களின் "அபிதா"விற்கு தமிழ் எழுத்தாளர்கள் எவர் சிறந்த புத்தகங்களை பற்றி பட்டியல் இட்டாலும் கண்டிப்பாக இடம் உண்டு.118 பக்க நாவல் படிக்க படிக்க பல்வேறு அர்த்தங்களை தந்துகொண்டே செல்கிறது ஒவ்வொரு பக்கத்திலும்.
1989 இல் சாகித்ய அகாடெமி விருது பெற்ற லா.ச.ரா வின் எழுத்து தனித்துவமானது.ஒரு தடவை படித்து முடித்த பிறகும் மறுமுறை படிக்க தூண்டுகின்ற எழுத்து நடை லா.ச.ரா வின் கதை சொல்லும் ஆற்றல்.படிக்கப்படிக்க வேறுவேறு அனுபவங்களையும்,அர்த்தங்களையும் தந்து வாசகனை அபிதா விற்கு உள்ளயே கட்டிப்போட்டுவிடுகின்றன.

கண்டதே காக்ஷி
கொண்டதே கோலம்
வந்ததே லாபம்
இன்று இப்படி போச்சா?
நாளை என்னவாகுமோ?
என் நேரத்தை காசாக எண்ணி எண்ணிக் கழித்த அந்நாளில்
"அதோ அந்த வீட்டில் இன்று சமாராதனை"
"இந்த கோயிலில் உச்சி வேலைக்கு உண்டைக் கட்டி"
என்று எனக்கு கைஜாடையாகவே வயிற்றுக்கு வழி காட்டியவன் எவனாயினும் அவன் என்
வயது ஏற்ப என் அண்ணனோ தம்பியோ; தாகத்துக்கு தவிக்கையில் ஏந்திய கையில் கிண்டி மூக்குவழியோ குடத்து வாய்வழியோ ஜலம் வார்தவள் என் தங்கையோ ,தாயோ.


அம்பி நீ நாலு நாளைக்குத் திகைப் பூண்டு மிதிச்ச மாதிரி ஊமைகாயம் பட்டமாதிரி, வாயடைசிப் போய்க் கண்ணாலே என்னை தேடித்தேடி தவிச்சிடுப் போனியே! எனக்கு மறைப்பு கட்டியிருந்த ஓலைத் தடுக்கின் பின்னாலிருந்து பார்த்தேன்; உன்னைப் பார்க்க ஒரு பக்கம் சிரிப்பா வந்தது.ஒரு பக்கம் பரிதாபமாயிருந்தது.ஆனால், அதுக்கபுறம் எனக்கே ஏக்கம் பிடிச்சுப்போச்சு அம்பி.அம்மா சட்ட திட்டம் பண்ணிப்பிட்டா. 'நீ இனிமேல் யாரோடும் இஷ்டப்படி பேசிண்டு கூதடிக்கப்படாது.உன் இஷ்டத்துக்கு கூடத்திற்கு வாசலிலே வந்து நிக்கப்படாது.'ன்னு திடிர்த்திடிர்னு ,நினைக்காத சமயத்தில் ,எதிர்பாரத இடத்தில , எதிரே,பின்னால் இருந்து,பக்கதிலிருந்து அம்மா புதையல் காக்கும் பூதம் போல் முளைகறப்போ 'பகீர் பகீர்'னு வயத்தை சுருட்டுறது. குத்தமில்லாத இடத்தில என்ன குத்தம் பண்ணினேன்னு சதா திகில்; வீடு ஜெயிலாயிடுத்து. வீடென்ன, இந்த பரந்த பூமியையே அம்மா சுவரை போட்டு வளசுப்பிட்டாள். என்னவோ பாதி புரிஞ்சதும் புரியாததுமா ஏதோ சொல்றா;

'தாத்தா சொல்வார்: ' உன் அம்மா கண்ணிராவே கரைஞ்சு போயிட்டா'னு.
'தாத்தவை நன்னா நினைவிருக்கு .திண்ணையில்தான் எப்பவும் வாசம்.தாத்தாவுக்கு கண் தெரியாது .தலையை தடவி என்னை தெரிஞ்சுப்பார்.கதையெல்லாம் நல்லா சொல்லுவார்.'இப்போ என் கைதான் அம்மா,என் கண்' என்பார்.'வாலு போச்சு கத்தி வந்தது டம்டம்;குரங்குக்கு ஒண்ணு போனால் ஒண்ணு வந்தது டம்டம்.உன் தாத்தாவுக்கு
கண்ணு போச்சு பொண்ணு போச்சு எல்லாம் போச்சு உசிர் போகலே டம்டம்'னு ஏதோ சிரிப்பு வர மாதிரி சொல்லி முடிப்பார்.சிரிப்பு கேக்காமல் வந்துடும்.சிரிச்சப்புறம் சிரிச்சது தப்புன்னு தெரிஞ்சு பயமாயிருக்கும்.ஆனால் ஏன் தப்புன்னு தெரியாது.

'ஒரொரு சமயம் கண்ணிலிருந்து சதையை உரிச்சாப் போல்,கண்ணே திடிர்னு தெரிஞ்சுட்டாப் போல் ஒரு திக்கா முறைச்சு பார்திண்டிருப்பார்.அப்படி என்னத்தை பார்க்கறார்னு அந்தப் பக்கம் திரும்பி பார்ப்பேன்.எனக்கு ஒன்னும் தெரியாது.ஆனால்,அவருக்கு மாத்திரம் ஏதோ தெரியும்போல இருக்கு.இப்போ தெரியறது என்பார். திரும்பவும் அந்தத் திசையைப் பார்பேன் .அங்கு ஒண்ணுமில்லை.

'என்னது தாத்தா?'
'இப்போ புரியறது'
'எது தாத்தா?'
'ஏன் அப்படிக் கண்ணீரா உருகி,காற்றில் கற்பூரமா காணாமலே போயிட்டான்னு.'
'ஏன் தாத்தா?'

'ஆனால் ,இப்போ புரிஞ்சு பிரயோஜனம்? புரிஞ்சதை சொல்லித்தான் பிரயோஜனம்? அப்பவே புரிஞ்சிருந்தாலும் அதனால் நடக்கப்போற காரியமும் இல்லை.ரகளைதான் கூட.நன்னா புரியறது.புரியறதுக்கு மேல 'ப்ரூவ்'ஆறது;கிட்டி முட்டிப்போனால் யாருக்கு யார் ? நீ யாரோ நான் யாரோ ,யார் யாரோ ஆரரிரோ ...ன்'னு கட்டை குரல்லில் தாலாட்டுப் பாட ஆரம்பித்துவிடுவார்.


'என்ன தாத்தா பாடறேள்!ஒன்னுமே புரியலியே!'
'எல்லா கேள்விக்கும் ஒரே பதில் ,ஒரே பதில்தான்.ஒரே கேள்வி, கேள்வியேதான் பதில் -ஆரரிரோ ஆரரிரோ-'
'திடிர்னு தாத்தா சிரிப்பார் .சிரிப்பு புரியாது ;ஆனால் அதன் வேதனை மட்டும் எனக்கு அப்பவே புரியும் -ஏன் மாமா உங்கள் கண்ணில் திரை மறைக்கிறது?'

வெட்கமற்ற கண்ணீர்- அல்ல,வெட்கம் நிறைந்ததா என் கன்னங்களில் வழிகின்றது.ஆயினும் என் குரல் மட்டும் கண்ணீரில் குளித்ததாய் , சுத்தமாய், தெளிவாய் ஒலிக்கின்றது.

உன்கதை நீ சொல்கிறாய்.புஷ்பம் மலர்வது போல்,அர்த்தங்கள் ஆயிரம் இதழ்கள் என்னில் தளையவிழ்கின்றன.ஆனால்,உன் தாத்தா சொன்னாற்ப்போல்-பிரயோஜனம்?

குறைந்தபட்சம்,அதிகபட்சம் என்ற வரையறைக்குள் அபிதாவை படிக்கும் மறு எண்ணிக்கை அடங்குவதில்லை.

விலை-75 ,பக்கங்கள் -118
கிடைக்குமிடம்-
கிழக்கு பதிப்பகம்
no 33 /15 -எல்டாம்ஸ் ரோடு ,
ஆழ்வார்பேட்டை.
சென்னை-18 .
phone - 044 -42009601

No comments:

Post a Comment