Sunday, September 13, 2009

அறியாச் சிறுமியாய் அணைத்துக்கொள்...

அம்மாவுக்கு கவிதையெல்லாம் சும்மா
அடுக்களை இருட்டுள்
அம்மாவின் சூரியன் சுருங்கிப் போச்சு
தன் வீடு, கணவன், குழந்தை
சமையல், புடவை
இவையன்றி வேறேதும்
அறிவாயோ அம்மா சொல்.

உன் கனவுகளின் சருகுகள்தான்
உனக்கு காலடிப் பாதையோ ?
அம்மாவுக்கு தனியாய் ஏதும் இல்லை;

இருப்பினும் அம்மா எல்லாமும் ஆவாள்.
அம்மாவின்
மெட்டிக் கால் தடங்கள்
தரையிலும், மனதின் கரையிலும்
அம்மா நீ
வரைந்த சித்திரங்கள்
காற்று வெளியிலும்
என் கனவு வழியிலும்

மனத்தெளிவில்
முக்கிப் பார்த்தால்
சாயம் வெளுத்து
பல் இளிக்கும் சொந்தங்கள்
புன்னகைச் சருகுகள்
போர்த்த புதைகுழிகள்
பாதை எங்கும்.
என் கற்பனையின்
சவங்கள் நாறும்
கவிதை நோட்டில்.

புத்தக வார்த்தையாய்ப் போச்சு
பிரியமும், நேசமும்.
எனவே அம்மா நீ
மறுபடி தொட்டிலிடு
உன் மடியில்.
எனக்காக
அறியாச் சிறுமியாய்
அணைத்துக்கொள் என்னை!
-உமா மகேஸ்வரி.

1 comment:

  1. புத்தக வார்த்தையாய்ப் போச்சு
    பிரியமும், நேசமும்.
    எனவே அம்மா நீ
    மறுபடி தொட்டிலிடு
    உன் மடியில்.
    எனக்காக
    அறியாச் சிறுமியாய்
    அணைத்துக்கொள் என்னை!

    ReplyDelete