Saturday, August 18, 2012

கவிதை இறகு -ஆவணி

குணா (எ ) குணசேகரன்

காணவில்லை
பெயர் : குணா (எ ) குணசேகரன்
வயது : 31
அடையாளம் : கன்னத்தில் காசளவு
மச்சமொன்று காணப்படும்
காணாமல் போனபோது
நீல நிற டீ-ஷர்ட்டும்
கருப்பு நிற பேண்ட்டும்
அணிந்திருந்தான்.

பேருந்து நிலைய சுவரொட்டியை படித்து
முடித்து திரும்பியபோது
எதிரே குணசேகரன் நின்றுகொண்டிருந்தான்
சற்றே மனநிலை பிசகியவர்
எனக் குறிப்பிடப்பட்டிருந்தபடியால்
தயக்கத்தோடே அணுகினேன்
ஏகதிபத்தியத்தின் அத்துமீறல்களும்
ஆக்கிரமிப்புகளுக்கும் எதிராய்
கண்டனம் சொன்னான்
நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து
வருத்தம் தெரிவித்தான்
புறநானுற்றின் 'தொடித்தலை விழுத்தாண்டினார்'
பாடலொன்றைக் குறிப்பிட்டுப் பேசினான்
பிகாஷோ ஓவியங்களை பார்த்திருக்கிறீர்களா என
வினவினான்


பாவம் அந்த வீடு
குணாவை வைத்துக்கொண்டு
என்ன செய்யப்போகிறது
பாவம் குணா
அந்த வீட்டை வைத்துக்கொண்டு
என்ன செய்யப்போகிறான்
வயிற்றை நிரவிக்காட்டி
பசிக்குது என்றவனுக்கு
உணவுபசரித்துக் கொண்டிருக்கிறேன்

காண்போர் தகவல் தெரிவிக்க வேண்டிய
தொலைபேசி எண் ஒன்று
சுவரொட்டியின் கீழே தரப்பட்டுள்ளது
நீங்கள் சரியென்று சொன்னால்
அவனை வீட்டில் சேர்த்துவிடலாம்

-இசை
"உறுமீன்களற்ற நதி"

No comments:

Post a Comment