Saturday, August 18, 2012

ஹிம்ஸினி

ஹிம்ஸினி அவள் பெயர்.
எட்டு மணிக்குச் சந்தித்தால்
ஏழுமணிக்கு என்ன செய்தே என்பாள்.

பார்த்தால் குறைப்பார்வை
முழுக்கப்பார்க்கவில்லை என்பாள்.

பேசினால் போதாது என்பாள்
பேசுவதற்கா வந்தாய் என்பாள்

சொக்கி நின்றால் மக்கு என்பாள்
தொட்டிழுத்தால் முரடு என்பாள்

மென்மை காத்தால்
அன்பே இல்லையென்று
அநியாயப் பழி சொல்வாள்

திரட்டுப் பாலாய் திகட்டி எடுப்பாள்

முக்குளித்து முக்குளித்து மூழ்கினபின்பும்
நனையவில்லை பார் என்பாள்

நான் நிரம்பி வழிந்த அன்றைக்கும்
என் நேற்றைய தப்புக்கு அழுவாள்.

ஒரு நிமிடம் இரு
மூச்சு விடுகிறேன் என்றேன்

அவ்வளவு தான்
மூச்சடங்கிப்போய் விட்டாள்.

மிருத்யுஞ்சய ஜெபத்தில் மீட்டு
மடியில் போட்டுக்கொண்டேன்

முப்பதே நாள் பழக்கத்தில் இவளிடம்
முப்பது வருடம் கூட வாழ்ந்த ஹிம்ஸை.

எனினும் இவள் என் ஜீவ நிழல்.
என்னைப் புரட்டிபுரட்டிப்போடும்
இவள் காதலுக்கு மூன்று நிலைகள் .
உச்சம் அதி உச்சம் உன்னத உச்சம்

கொடுமையதில் என் திணறல்
எப்பொதைக்குமாக.


-மாலதி

No comments:

Post a Comment