Saturday, August 18, 2012

இன்னொன்றைப் பற்றி

ஒன்றைப் பற்றி நான் சொன்னால், அது
இன்னொன்றைப் பற்றியதாய் இருக்கிறது.
உண்மைதான்.
ஒன்றைத் தவிர்த்து இன்னொன்றைச் சொல்வது
இயலாது.
பினோஷே பற்றி எழுதுகிற போது
சுகார்த்தோ பற்றியும் மாக்கோஸ் பற்றியும்
ஹிற்லர் பற்றியும் எழுதப்படுகிறது.
சிலேயில் காணாமற் போனவன்
இன்னமும் செம்மணியில் புதையுண்டிருக்கிறான்.
மிருசுவில் புதைகுழியும் சூரியகந்தவினதும்
ஒரே கிடங்காகத் தான் தோண்டப்பட்டன.
இன்னும்
யாழ்நூலகத்தை எரித்த நெருப்பில் தான்
பாபர் மசூதியை இடித்த கடப்பாரைகள்
வடிக்கப்பட்டன.
அதே நெருப்பு ஆப்கானிஸ்தானில்
புத்தர் சிலைகளை வெடித்துத் தகர்க்கிறது.
ஷார்ப்வில் படுகொலைச் செய்தி
மிலாய் கிராமத்தின் படுகொலையையும்
ஜாலியன்வாலா பாக் படுகொலையையும்
எனக்குச் சொன்னது.
மாவீரன் பகத் சிங் தொங்கிய கயிற்றில் தானே
கயத்தாற்றில் கட்டப்பொம்மன் தொங்கினான்.
கற்சிலை மடுவில் இருப்பது, தனியே
பண்டார வன்னியனின் நினைவுச் சின்னமா?
இரண்டாம் உலகப் போருக்கு முந்திய ஜேர்மனியில்
யூதர்கட்கான முகாங்கள் எப்போது மூடப்பட்டன?
மலேசியாவிலும் கம்யூனிஸ்ட்டுகட்கான
முகாம்களும்
தென்வியட்நாமின் மாதிரிக் கிராமங்களும்
தமிழகத்தின் அகதி முகாம்களும் எங்கிருந்து தொடங்கின?
உலகம்
ஒரு முட்கம்பி வேலியால் இரண்டாகப்
பிரிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் ஒரு தென்னாபிரிக்கனை
உள்ளே வராதே என்று சொன்ன பலகை,
ஒவ்வொரு தமிழ்க் கோவிலுள்ளும் ஒரு தமிழனை
நுழையாமல் தடுத்தது.
அமெரிக்காவின் கூ க்ளுக்ஸ் க்ளான் கையில்
ஏந்திய தீவட்டிகள் கொண்டு
கீழ் வெண்மணியில் மனிதர்
குடிசைகளுடன் எரிக்கப்பட்டனர்.
மட்டக்களப்புக்குப் போகும் வழியில்
தமிழனிடம் கேட்கப்படுகிற அடையாள அட்டையை
இஸ்ரேலிய சிப்பாயிடம் பலஸ்தீனியன் நீட்டுகிறான்
அயர்லாந்தில் ஆங்கில ஆதிக்கத்தால்
அழிக்கப்பட்ட மொழி
துருக்கியின் ஆதிக்கத்தில் உள்ள
குர்தியனின் மொழியல்லவா.
ஐ.ஆர்.ஏ. தடைசெய்யப்பட்டதாக அறிவிக்க்ப்பட்ட அன்று
குர்தியனதும் தமிழனதும் விடுதலை இயக்கங்கள்
தடைசெய்யப்பட்டு விட்டன.
ஹரி ட்ரூமன் ஹிரோஷிமாவில் எறிவித்ததும்
வின்ஸ்ற்றன் சேச்சில் ட்றெஸ்டெனில் எறிவித்ததும்
இன்றைய டீக்தாத் மீது அல்லவா விழுகின்றன.
வட அயர்லாந்தில் அமைதி காக்கப் போனவர்களே
வட இலங்கையிலும் அமைதி காத்தார்கள்.
“ஒற்றுமைகளில் அதிகம் இல்லை -
வேற்றுமையே முதன்மையானது” என்பவன் அறிவானா,
தென்னிலங்கையின் மானம்பெரிக்கும்
தமிழகத்தின் பத்மினிக்கும் இருந்த வேறுபாடு
மானம்பெரி இறந்ததும்
பத்மினி மணமானவள் என்பதுமே என?
கொடிகளின் நிறங்களும் தேசங்களின் பேர்களும்
தேசிய கீதங்களின் மெட்டுக்களும்
சீருடைகளின் நிறங்களும் வடிவமைப்பும் வேறு.
இந்த வேற்றுமைகள் கொண்டு மறைக்க இயலாத
ஒற்றுமை இருப்பதாலே தான்,
இஸ்ரேல் பற்றி எழுதினால்
சவூதி அராபிய தணிக்கை அதிகாரியும்
குர்திஸ்தான் பற்றி எழுதினால்
இலங்கை அதிகாரியும்
காஷ்மீர் பற்றிச் சொன்னால் பிலிப்பினிய அதிகாரியும்
உள்ளூர்ச் செய்திகள் பற்றிய
தணிக்கை விதிகள் மீறப்படுவதாகச் சினக்கிறார்கள்.
அது சரியானதே.
ஒன்றைப் பற்றி எழுதும் எவனாலும்
வேறொன்றைப் பற்றி எழுதுவதைத் தவிர்க்க முடிகிறதா?

சீனத்துப் பெண்ணின் பாதங்களை இறுகப் பிணித்த
துணி அவிழ்க்கப்பட்டபோது
உடன் கட்டை ஏறிய இந்தியப் பெண்
உயிர்த்தெழுந்து நடந்தாள்.
ஒரு பலஸ்தீனப் பெண் போராளி
முழு அரபுப் பெண்ணினத்தையும் விடுதலை
செய்கிறாள்
ரஷ்யப் புரட்சி முழு ஆசியாவையும் ஆபிரிக்காவையும்
கொலனி ஆட்சியினின்று விடுதலை செய்தது.
கொலம்பியாவின் கெரில்லாப் பேராளியும்
மெக்ஸிகோவின் ஸப்பாட்டிஸ்டும்
பிலிப்பினிய மக்கள் படை வீரனும் ஒருவனே.
மறவாதே, காஷ்மீர் விடுதலைப் போராளி
ஈழத் தமிழனுக்காகத் தான் போராடுகிறான்.
எனவே
எந்த ஒன்றைப் பற்றிப் பேசும் போதும்
இன்னொன்று பற்றியும், ஏன்
எல்லாவற்றைப் பற்றியும் பேச முடிகிறது.

-சி. சிவசேகரம்.
"இன்னொன்றைப் பற்றி"

No comments:

Post a Comment