Wednesday, April 27, 2011

காதலின் அர்த்தத்தை நான் புரிந்துகொண்டபோது


காதலின் அர்த்தத்தை
நான் புரிந்துகொண்டபோது
மனதில் கிளை விரித்திருந்த மரங்களுக்கு
இலை உதிர்ந்து போயிற்று

என்னுடைய காதல்
அது எங்கிருந்து துவங்குகிறது
என்பதை நான் இன்னும்
கண்டுபிடிக்கவில்லை

நிச்சயமாக கண்களிலிருந்து துவங்கவில்லை
என்பதை மட்டும்தான்
இப்போது சொல்ல முடிகிறது

உன்னோடு இணைந்ததில்
கரைந்துபோன காலங்களை
"கனவுகளின் தொகுப்பு " என்று
விஞ்ஞானம் போல வரையறை செய்வதிலும்
காதல் எங்கிருந்து முளைக்கிறது
என ஆராய முனைவதிலும்
அநியாயம் ஆரம்பிக்கிறது

இரக்கமில்லாமல்
குருதியைப் பற்றிய எவ்வித நினைவுகளுமற்று
அறிவு
காதலை கொல்கிறது

இந்த இடத்தில் விவாதங்கள் வேண்டாம்
தர்க்கம், உளவியல், தத்துவ நூல்களின்
பரிசுப் பதிப்புகளை தள்ளி வையுங்கள்

நீண்ட நாள் உறவின் பின்
உன் அழைப்பைக்
கண்களில் வாசிக்கவும்
உன் துடிப்பை விரல் நுனியில் புரியவும்
இயல்பாய் முடிகிறது

இந்த இரவில்
நட்சத்திரங்களோடு சேர்ந்து
என் இதயமும் துடித்துக்கொண்டிருக்கிறது

நிர்ச்சலமான நீல ஆகாய பின்னணியில்
கடற்கரை மணலில்
உன்னுடைய நீண்ட விரல்கள்
என் கேசத்தை நீவ
உன் மார்புகளில் துயில விரும்புகிறேன்

மிகவும்
மிகவும்
மிகவும்.


-சேரன்.
"நீ இப்பொழுது இறங்கும் ஆறு"

No comments:

Post a Comment