Wednesday, April 20, 2011

சிலுவைராஜ் சரித்திரம்



நல்ல நூல்களை தேடி படிக்கும் தமிழ் வாசகர்கள் எப்படி இந்த புத்தகத்தை கொண்டாட மறந்தார்கள்? இந்த கேள்வியே இந்த சிலுவைராஜ் சரித்திரம் படித்தபின் என்னுள் எழுந்தது.எந்த வித முன்னுரைகள் மற்றும் அணிந்துரைகள் ஏதும் இல்லாமல் முதல் பக்கத்திலிருந்து ஆரம்பிகின்றது.பல்வேறு இடங்களில் தேடி படித்தபோது இந்த நூல்" ராஜ் கௌதமன் " அவர்களின் தன் வரலாறு என்று அறியமுடிகிறது .

1950 களில் பிறந்த ஒரு குழந்தை பருவத்தில் இருந்து பருவம் பல கடந்து வாலிபன் ஆகும் வரை மிக விரிவாக சொல்லும் இந்த நூல் போல இன்னொரு நூல் இதுவரை நான் படித்ததில்லை. கிறிஸ்தவ தெருவில் பிறந்த ஒரு சிறுவன் யாரும் கைதூக்கி விட யாரும் இல்லை,பின்தொடர்வதற்கு முன்னோடி என்றும் யாரும் இல்லை.ஒரு கிராமத்தில் தாழ்த்தபட்டவன் என்று சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவனின் உணர்வுகளின் தொகுப்பு இந்த சிலுவைராஜ் சரித்திரம்.

தன் வரலாறு எழுதுவது சுலபம் இல்லை. தன்னை நல்லவனாக காட்டிக்கொள்ளவே அனைவரும் விரும்புவார்கள்.ஆனால் எந்த ஒரு சமரசம் இல்லாமல் உண்மையாய் எழுதுவது மிக சிரமம். உண்மையாய் எழுதுவது எழுத்தில்தெரிகிறது.வைரமுத்து எழுதியது மதுரையை சுற்றியுள்ள கிராமங்களின் கதை "கள்ளிகாட்டு இதிகாசம்".கீ.ராஜநாராயணன் எழுதியது கரிசல்காட்டை பற்றிய "கரிசல் காட்டு கடுதாசி" , கவிஞர் கலாப்ரியா திருநெல்வேலியை பற்றி எழுதியது "நினைவின் தாழ்வாரங்கள்" ,ஓவியர் மனோகர் மதுரை நகர் பற்றி எழுதிய "எனது மதுரை நினைவுகள்", திருநெல்வேலியை பற்றி வல்லிக்கண்ணன் எழுதிய "நிலைபெற்ற நினைவுகள்", சுஜாதா ஸ்ரீரங்கத்தை பற்றி எழுதிய "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" போன்ற நூல்களின் வரிசையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமத்தில் வாழ்ந்த வாழ்க்கையை "சிலுவைராஜ் சரித்திரம்" மூலமாக ராஜ்கௌதமன் நமக்கு வழங்கியிருக்கிறார்.

ஆரம்பித்து பின் போக போக கனம் கூடிக்கொண்டே போகிறது.மகிழ்ச்சி, சோகம், விரக்தி, வீரம், நகைச்சுவை என எல்லாம் நிறைந்த துன்பசரித்திரம் இது.ஏனெனில் பாதையும் கொடியது! பயணமும் கொடியது!.இதை எழுதும்போது எப்போதோ படித்த இரண்டு வரிகள் என் நினைவுக்கு வருகிறது "கோரமான காலங்கள்,கொடுமையான இதயங்கள் ".

சில பகுதிகள் நூலிலிருந்து

சிலுவ வச்சிருந்த பிரோஸ்பெக்டஸ பேசாம படிச்சுக்கிட்டுருந்தவரு, திடிர்னு,"காஷன் டெபாசிட்னா என்னடா அர்த்தம்?னு கேட்டார். அந்த கூட்டத்துல வச்சி சிலுவய அவமானபடுத்தணும்னு நெனைசிருப் பாரோ? அவர் பண்ணுன தப்புக்கு சிலுவதான் கெடைச்சானாகும். சிலுவைக்கித் தோரயமா அர்த்தம் தெரியும். அதஎப்பிடி ஒரே வார்த்தையில சொல்லுறதுன்னு யோசிச்சிகிட்டிருந்தான். தகப்பனுக்கு ஏறிப்போச்சு.கூட்டத்துல வச்சி அடிச்சாலும் அடிச்சிருவார்னு சிலுவ, "மொதல்லியே பணங் கட்றது'ன்னு சொன்னான். என்னடா சொன்னேன்னு அடிக்க வந்துட்டார்.

"அடடா என்ன சார் இது?இதுக்குப்போயி பையனக் கோவிச்சுகிரிங்க.நமக்கு தெரிஞ்சதெல்லாம் பையனுக்கு தெரியுமா'ன்னு மற்ற பெற்றோர்கள் வந்து சமாதனம் பண்ணுனாங்க.சிலுவைக்கி ரொம்ப அவமானமாப் போச்சு பி.யு.சில சேர்ந்து படிச்சபோது இங்கலீஸ் டுடோரியல் கிளாஸ்ல இங்கலீஸ் டியூட்டர் இடியம்,பிரேஸ்னு புதுசா சொல்லிக்கொடுத்தார் . ரெண்டு மூணு வார்த்தைகளைச் சேர்த்தா வேற அர்த்தம் , தனித்தனியா பார்த்த வேற வேற அர்த்தம் வரும். அத்தன பேருக்கும் மத்தியில வச்சுத் தன்ன அசிங்கப்படுத்தன அந்தத் தகப்பனை, இடியம் பிரேஸ்சை வச்சு அடிக்க முடிவு செஞ்சாம். வெறும் இடியமும் பிரேசும் கலந்து இங்கிலீஸ்ல தகப்பனுக்கு ஒரு கடிதம் போட்டான்.

'மகனே,உன் கடிதத்தை என்னால புரிந்துகொள்ள முடியவில்லை . இனிமேல் எப்பவும் போல தமிழிலயே எழுது.உனக்கு என் ஆசீர்வாதம்'னு பதில் வந்தது. அப்பிடி வா வழிக்கு. இனிமே இங்கலீஸ் வார்த்தைக்கி அர்த்தங் கேட்டு அடிக்க வருவியா'னு சிலுவ மனசுக்குள்ள செயக்கொடி நாட்டினான்.


நாடகத்துல நடிக்க வந்தவங்கள்ள முக்காவாசிபேர் எம்.ஜி.ஆர் ரசிகர்க.அதோடு தி.மு.க அனுதாபிக வேற.எம்.ஜி.ஆர் படத்துல வர்ரமாதிரி எல்லாப் பயகளுக்கும் சண்டக் காட்சிக வேணுமாம். அதுக்கு என்ன பண்றது?கதைய அதுக்குதக்கன மாத்தனுமாம். சிலுவைக்கி எரிச்சல்தான். இந்தப் பெயகள வச்சு வரலாற்று நாடகத்த எப்பிடிதாம் அரங்கேற்றப் போறோமோன்னு சிலுவைக்கித் தயக்கமா போச்சி.சிலபேர் கலைஞர் கருணாநிதி ஸ்டைலுல கதவசனம் வேனும்னாங்க.அடுக்கு மொழியில எல்லாப் பெயகளும் பேசனுமாம். ராசராச சோழ ராசன் காலத்துல இப்பிடியெல்லாம் பேச மாடங்கப்பானு சொன்னா கேட்டதான? சில பேரு சினிமாவுல வர்ர வில்லன்கள் மாதிரியே பேசுனாங்க.இந்தப் பாத்திரத்துக்கு இப்பிடிப் பேசுனாப் போதும்னா கேக்கமாட்டாங்க.கோபமா வசனம் வேணும்னாபோதும் பிச்சு ஒதறிப் போடுவாங்க.சோகமாப் பேசவே வர்ல. நந்தினி வேசத்துக்கு ஒருத்தனும் தயாரா இல்ல.போயும் போயும் பொம்பள வேசந்தானாக்கும் மறுத்துட்டாங்க. கடேசியா,சேந்தன் அமுதன் வேசத்துல நடிக்கிறதாஇருந்தா,நந்தினியா மொதல் சீன்ல வரத் தயார்னு காக்காகண்ணன் சம்மதிச்சான்.நாகநந்தியா நடிக்கச் சம்மதிச்ச சேவியரு,அந்த வேசதுக்காக மொட்டை போட மறுத்ததோட மட்டுமல்ல,'அடிமை பெண்' படத்துல 'தாயில்லாமல் நானில்லை'ங்கற பாட்டுல எம்.ஜி.ஆர் போட்டிருந்த டிரெஸ்லதான் நடிபேம்னு வேற அடம்புடுச்சான். நட்டசாதன பண்ணினான். மேடையில ஒளி வெள்ளத்துல தோன்றும்போது கூட்டத்தின் முன் வரிசையில் தன்னையே விழிகளால் சாப்பிட்டுகொண்டிருக்கும் காதலிக்கு முன் ஒரு மொட்டக் கிழவனாநிக்க அவனுக்கு அவமனமாதான் இருந்திருக்கும். கதைல வந்தியதேவனுக்கும் நாகநந்திக்கும் எடையில வாள் யுத்தமெல்லாம் கெடையாது.ஆனா அப்பிடியொரு சீன் கண்டிப்பா வேணும்,அப்பதாங் கதையில சூடு பிடிக்கும், பாக்கிறவங்களுக்கும் அலுக்காது.சும்மா வசனம் பேசிகிட்டே போன அச்சலாத்தியா இருக்கும். இப்பிடி நடிகர்கள் ஆலோசனைகளை தாரளமாக வழங்கினார்கள்.இதுகெடையில பெரிய பழுவேட்டரையர்ரா நடிச்ச பெரியம்மா மகனுக்கு அடுக்குமொழியில்லதாம் வசனம் வேணுமாம்.சரி தொலஞ்சு போறாம்னு அவம் பேசுற வசனம் பூராத்தையும் அடுக்கு மொழியில சிலுவ எழுதிக் கொடுத்தான்.'அற்பர்களை தள்ள வேண்டும் ,அதிகாரத்தை அள்ள வேண்டும்,ஆட்சியை கொள்ள வேண்டும்' என்று பெரிய பழுவேட்டரையர் ராகத்தோடு பேசியதைக் கேட்ட வந்தியத்தேவன் ' மருமகனே! இது ஓரவஞ்சனைதானே. பெரியம்ம மகனுக்கு மட்டும் அடுக்கு மொழி எனக் கில்லியாக்கும்னு நியாயம் பேசினார்.சரி தொலைங்கன்னு அவருக்கும் அடுக்கு மொழில வசனத்த மாத்தினான்.தொடர்ந்து நாகநந்திக்கும் மாத்த வேண்டியதா போச்சு.சம்புவரையர்ராக நடித்த கழுதக்காலனுக்கு ' அருள் நிறைந்த மரியாயே வாழ்க.கர்த்தர் நம்முடனே...'ன்னு ஜெபிக்கிற மாதிரியே வசனமும் வந்தது. ஆழ்வார்க்கடியான்தான் நாடகத்துல காமெடி பாத்திரம்,அதெப்பத்தி கவலயில்ல.ராஜகுரு அநிருத்தப் பிரம்மராயர் வேசத்துல நடிச்ச பெயகடைசி நேரத்துல கால வாரிருவாம்னு சொன்னங்க.நல்ல வேல அப்பிடி ஏதும் நடக்கல.ஆனா மேடையில அவன் பண்ணுன கூத்துக்கு அவன் கால வாரியேகூட விட்டிருக்கலாம்.

நாடகத்துல நடிக்கிறவங்களுக்கு பழைய சாவடியில வச்சு மேக்கப் நடந்துக்கொண்டிருந்தது. அந்த சீல்தூர் தாயோளி ஏமாத்துனதுனால,அவங்கவங்க வீடுகள்ளயிருந்து கொண்ணாந்த வேட்டி சேலை தாவணிகள வச்சு வரலாற்றுப் பாத்திரங்களுக்கான மேக்கப் போட்டாங்க.சிலுவையும் மத்த பெயகளும் கொஞ்சங் கூட சேவியர் வந்து நிப்பாம்னு
எதிர்ப்பாக்கல, பெய நெத்திக் கட்டோட வந்து நின்னாம். அவனுக்கு அவனேதான் மேக்கப் மேன்.' அடிமைப் பெண்'எம்.ஜி.ஆர் மாதிரி மேக்கப் போட்டான்.கூடவே ஒரு கல்லையும் கொண்டு வந்திருந்தான்.இது எதுக்குப்பான்னு கேட்டா, எம்.ஜி.ஆர் மாதிரி ஒரு கால கல்லுமேல வச்சு, எடது கைய இடுப்புல வச்சு போஸ் குடுக்கறதுகாக சொன்னான்.
நாகநந்தி,எம்.ஜி.ஆர் போஸ் குடுக்கப் போறத நெனைச்சு சிலுவைக்கி இப்ப எரிச்சல் கெடையாது. சிரிப்புதான்.கல்கியின் 'பொன்னியின் செல்வன்' ஆர்.சி தெருவில் இப்பிடித்தான் நாடகமாக அரங்கேற்ற முடியும் என்கிற விசயம்
தெளிவாயிருச்சி.நல்ல காலம்,அந்தக் கல்கி கிருஷ்ணமூர்த்தி இப்ப இல்ல.

அந்த சீல்தூர் மயிராண்டி செட்டோடு ராத்திரி எட்டு மணிக்கி வந்து சேந்தான். அதுக்கும் ஒரு மூச்சு செங்கோடி சண்டபோட்டான்.'நாடகம் போடுற நேரத்த பாரு. சனங்க எல்லாம் ஓறங்குனப் பெறகு நல்லாப் போடுங்கடா'ன்னு சத்தம் போட்டான்.சிலுவ அரங்கேற்றுன நாடகம் நடகமாகவா இருந்தது? ரிகர்சல ஒரு மாதமா சொல்லிக் குடுத்த தெல்லாம் வேஸ்ட்.சொல்லிக் குடுத்த மாதிரி நடிக்கல. கூட்டத்துக்கு ஏத்தமாதிரி அவனவம் சேட்ட பண்ண ரம்பிச்சிட்டான்.காமெடியன் ஆழ்வார்க்கடியான் மேடையில வந்த போது எல்லாம் ஒரே கைதட்டல்தான். அவன் பேசுற தமிழ் மட்டும் அந்தக் கூட்டத்துக்குப் புரிஞ்சது.மத்தவங்க பேசுன அடுக்கு மொழியும்,புடுக்கு மொழியும் புரியல.கத என்னன்னே புரியல.தொடர்ந்து கூட்டத்தின் கவனத்த எல்லாம் ஆழ்வார்க்கடியான் தட்டி சென்றதை பார்க்கப் பார்க்க அநிருத்தப் பிரம்மராயர்க்கு பொறமையாகிவிட்டது. தாம் கணம் பொருந்திய ஒரு ராஜகுரு என்பதை சுத்தமா மறந்திட்டுப் மேடையில அவர் வசனம் பேசாத சமயங்கள்ல கூட்டத்த பார்த்துக் கோணங்கி சேட்ட பண்ண ஆரம்பிச்சார்.அவனுக்கும் காமெடி பண்ண வருமாம்! மொதல் சீன்லயே காக்காக் கண்ணன் வேலையக் காட்டிட்டான். ஆதித்த கரிகாலனிடம் வெட்டுப்பட்டு செத்து கிடக்கிறமாதிரி படுத்துக்கிரனும்.அப்போ வெளக்கு அணையும்.திரை விழும்.பெறகு அவம் எந்திரிச்சி உள்ள போகணும். ஆனா அந்தப் பெய காட்சி முடிஞ்சதா விசில்அடிச்ச உடனையே விளக்கு அனனைகிறதுக்கு முன்னாடியே எந்திரிச்சி கூட்டத்த பார்த்து டாட்டாக் காட்டிட்டு வந்தான்!தலயில எழுத்துண்ணு சிலுவ தன் தலையில அடிச்சுகிட்டான் பிராம்டரா சிலுவை இருந்தாலும்,மேடையில நடிச்சுக்கிட்டு இருந்த பெயகலே ஒருத்தனுக்கு ஒருத்தன் பிராம்டரா எடுத்துக் கொடுத்துகிட்டிருந்தாங்க. வேடிக்கை பாக்குறத தவிர வேறென்ன செய்ய?

சிலுவைராஜ் சரித்திரம்
-ராஜ்கௌதமன்

தமிழினி
#342 - TTK சாலை,
சென்னை -14
விலை-ரூ 240 /-

No comments:

Post a Comment