Thursday, January 28, 2010

செல்லம்மா

டீ கடை வெப்பப் பாய்லர்
அருகே..

ஒரு நெளிந்த 'தம்' மின்
உச்சித் தலை எரிய..
நீ
வட்டமிட்டு அனுப்பிய வளையங்களில்..

நிக்கோடின் வாசமோ..
பிரவுன் நிற காரமோ..
பயணமாகிறது..

சாலை கடக்கக் காத்து நிற்கும்..
பள்ளிச் சிறுமியின்..
பச்சை ரிப்பனிலும்..
நாசித் துளையிலும்..
-இளங்கோ
வீதிகளும் வீடுகளும்
அடை மழையின் உச்சத்தில்
வீதிகளில் தண்ணீர்
நிரம்பியிருந்தது.

வீடுகளோ ஏரிகளை
ஆக்கிரமத்திருந்தன.
-பா.சதீஸ் முத்து கோபால்.
கட்டை விரல் பகுதியில்
தேய்ந்தும்,
மற்ற விரல்கள் பகுதியில்
அச்சு பதிந்தும்,
உழைத்து நிறம் மங்கிய
அப்பாவின் காதி செருப்பால்
பக்கத்தில் பளபளக்கிறது
மகனின் ரீபோக்.

ஒன்றில் சற்றே
வார் அறுந்த வுட்லாண்ட்ஸ்.
இன்னொரு காலில்
தையல்கள் சந்தித்த
ரப்பர் செருப்பு என
வறுமையிலும் சமத்துவத்தை
பறைசாற்றி அலைகிறான்
பேப்பர் பொறுக்கும் சிறுவன்.


இருச்சக்கர விபத்து,
கடற்கரை களிப்பு,
கலவர துப்பாக்கிச்சூடு,
ஜோடி மாறிடும்
திருமண வீடு,
தேய்ந்துவிட்ட அலட்சியம்...
என நிகழ்ந்த சம்பவத்தின்
மௌன சாட்சியாய் இருக்கிறது
ஒவ்வொரு ஒற்றை செருப்பும் !
- சஜயன் . பெண்ணுரிமை பேசிக் கொண்டிருக்கிறான்
பாரதி
பின்புலத்தில்
புடவையை தோளைச்சுற்றி
இறுக்கிக் கொள்கிறாள் செல்லம்மா.
- லதாமகன்.

No comments:

Post a Comment