என் செய நினைத்தாய் எனக்குரையாயோ ?
- பாரதியார்

வங்கக் கடல் அலையே
மாரடித்துக் கதறினையோ.
இமய முகட்டிலும் போய்
இடித்துக் கண் வடித்தாயோ.
நாதியற்ற தமிழகத்து மீனவர்கள்
சேதுக் கடலில் சிந்திய செங்குருதி
கங்கை வடி நிலத்தில்
கொட்டி அரற்றினையோ.
இவர்களும் இந்தியரே
என்று வடபுலத்து
மன்னர் உணரவென
வாய் விட்டு அழுதாயோ.
இந்தியன் தமிழன்என்பதனால் மீனவர் நீர்
சிங்களத்துப் படைகளுக்குச்
சிறு புழுவாய்ப் போனீரோ.
அதனால் கேட்பார் இலி நாய்போல
தினந்தோறும் உம்மைச்
சிங்களவன் சுட்டுச் சேதுக் கடல் எறிவான்.
முன்னர் ஒரு தடவை
இலங்கைக் கடற் படையை
கட்டி இழுத்து வந்தார்
இராமேஸ்வரக் கரையில் சிறைவைத்தார்.
அந்நாளில்
உங்கள் மேல் கைவைக்க அவர்கள்
இரண்டுதரம் யோசித்தார்.
அன்று மீனவரே நீங்கள்
இந்தியர் தமிழரென
தலை நிமிர்ந்தீர் கடல்களிலே.
ஒன்றல்ல இரண்டல்ல306 பிணம் வீழ்ந்தும் உங்களுக்காய்
ஏனென்று கேட்க
தலைவனென இன்று
இலையோ தமிழகத்தில் .
உங்களைக் காக்க
டெல்கியிலும் எவரிலையோ.
சென்னைச் சிற்றரசருக்குத்தமிழன் யார்
டெல்கிப் பேரரசருக்கு
இந்தியன் யார்
பெரும் வாக்கு வங்கி உள்ள
சாதிகளைச் சேர்ந்தவர்தான்.
தனிக் கட்சி கட்டவல்ல
சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.
உங்களுக்கோ வாக்கு வங்கி
ஒன்றும் பெரிதில்லை.
அதனால் கொன்றாலும் ஏனென்று
குரல் கொடுக்க யாருமில்லை.
தமிழகமே உனக்குத்தன்னாட்சி எதற்காக
இந்தியாவே உனக்குப்
படை அணிகள் எதற்காக
சேதுக் கடலை
மேலும் தமிழகத்து மீனவரின்
இடுகாடாய் ஆக்கவென்றா
சிங்களத்துக் கடற்படைக்கு
டெல்கியே நீ போய்
போர்க் கப்பல் பரிசு தந்தாய்.
தமிழகத்து மாகவிகாள்தலைமைக் கலைஞர்காள்
படை வந்து அன்னியர் உம்
பல் நூறு சகோதரரை
கொல்கின்ற போதும்
குரல் கொடுக்க மாட்டாரோ.
கல் நெஞ்சோ உங்கள்
கடற் கரையில் எந்நாளும்
தாலி அறுந்து
தமிழ்ப் பெண் அழ விதியோ?
-வ. ஐ. ச. ஜெயபாலன்

அருமையான பதிவு நண்பரே! கணிசமான நல்ல கவிதைகளை மீட்டிப் பார்க்க முடிகிறது, நண்பரே ஆனால் உங்கள் பதிவில் தவறு நடந்து விட்டது. நாள் எனும் கவிதை எனது கவிதையென பதிவாகி இருக்கிறது. ஆனால் அது என்னுடைய கவிதை அல்ல. திருத்திக் கொள்ளவும். இவ்வாறான பரவலான பணி செய்யும் பொழுது இப்படியெலாம் நடப்பதுண்டு.
ReplyDelete