Saturday, November 28, 2009

என் பிரியத்தின் பிரவாகம்

உயிரின் கடைசித் துகள்கள்
என்னை நீங்கத் தீர்மானித்த பொழுதில்
காற்றின் கரங்களைப் பற்றிக்கொண்டு
காலத்தின் கைபிடிக்குள் சிக்காது மீட்டு
மலைமுகட்டில் ஒரு கழுகுக்கூட்டை
என் இருப்பிடமாக்கினாய்
புள்ளியாய் மட்டுமே நீ தோன்றக்கூடிய தொலைவில்
புறப்படத் துவங்கிற்று என் பிரியத்தின் பிரவாகம்

உன் சுவாசத்தின் நெடி அறிய
புழுவாய் நெளிந்து நெருங்கவே
பறந்து விலகி தாகம் கூட்டினாய்
உன் நெருக்கத்தின் வெம்மை கிடைக்காது போயினும்
உன்னைப் பற்றிய அனுமானங்களோடு
பயணிக்கத் துவங்கினேன்
காதலின் ஆபத்தான பள்ளங்களில்
அறிவிப்பற்ற மழையாய் நீ என்னை
நனைக்கத் தொடங்கிய பொழுதில்
உனக்கான தாகம் வற்றத் துவங்கி
உன் இருத்தலே பெருந்துயராகிப் போனது


உன்னைக்காட்டிலும் போலியானது
என் காதலைக் கொழுத்து வளரவிட்ட
உன்னைப்பற்றியதான என் அனுமானங்கள்
என் அனுமானங்களுக்கு
உயிர் இருந்திருக்கலாம்
நான் மிஞ்சி இருக்கக்கூடும் . . .
- ந. லக்ஷ்மி சாகம்பரி
ஓடிக்கொண்டேயிருக்கிற நதி
போய்க்கொண்டேயிருக்கிற மேகம்
தினம் பூக்கிற மரம்
பறந்து திரிகிற வண்ணத்துப்பூச்சி
குரலெழும்பாமல் இசைக்கிற காற்று
வீடு முழுக்க வானம்
வானம் நிறைய பறவைகள்
அருகே, மிக அருகே
தொட்டுக்கொள்ளும் தூரத்தில்
என்றில்லாவிடினும்
என் குரல் கேட்கிற தொலைவில் நீ
இது போதும்,
இவை போதும்
வாழும்படிதான் இருக்கிறது -
வாழ்க்கை.
-சே. பிருந்தா

No comments:

Post a Comment