Sunday, November 1, 2009

திசைபழகிய பிறகு..

நீண்ட
நேரம்
பற்றியிருந்ததில்
வெதுவெதுத்திருந்த
உன் விரல்களைச்
சற்று கை மாற்றலாம்
என்ற எத்தனிப்பை
வீழ்த்தியது

நீ
இன்னும்
இறுகப் பற்றியதில்
தண்ணென்று
கசிந்த
ஈரம்
-லீனா மணிமேகலை
"ஒற்றையிலையென"
எனக்கான கேள்வி
உன்னிடத்திலும்
உனக்கான பதில்
என்னிடத்திலும்
யாரிடமும்
எதுவும் இல்லையென
பாவித்துக் கொண்டிருக்கிறோம்

-சுகிர்தராணி
"இரவு மிருகம்"
யாருடைய ஆட்காட்டி விரலையோ
பற்றியபடிதான்
திசைகளை வகுக்கிறோம்
திசைபழகிய பிறகு
தன் கைநழுவுமோவென்கிற
தாளவியலாத எளிய பதற்றத்தில் சீர்குலைகின்றன
எல்லா உறவுகளும்
-சல்மா
"பச்சை தேவதை"
வரிசை தப்பிய எறும்பு ஒன்று
வருகிறது தலையணை மேல்
அச்சுவார்த்த உடல்
சிறு அசைவுடன் நகர்கிறது

தலை தூக்கிப் பார்த்து
என்னைப் போலவே சிரிக்கிறது
வாயிலிருந்து சிறு தானியத்தைத் தவறவிட்டு

மீண்டும் தேடி எடுத்துக்கொண்டு போகிறது

மடியில் கட்டிவரும் என் அம்மாவின்
மரவள்ளிக் கிழங்கு வாசனையுடன்
- மாலதி மைத்ரி.
பேனாவின் ஈரம்
காயும் முன்
மனமே!
எண்ணியதை
சொல்லி விடு.

நிஜமாய் ஒரு பேச்சு
நிழலாய் ஒரு பேச்சு
பார்த்து பார்த்து
குணமும் மாறிப் போச்சு

நான் எப்படி என
நீ தீர்மானிக்காதே
இடம் மாறி
வலம் மாறி
எங்கும் செல்வேன்

வந்துவிடு என
நீ பணிக்க
வருவேன் என
நினைக்காதே
எல்லையே இல்லாத
பயணம் இது!
நீ
தொடரவும் முடியாது.
தேடலின்
ரகசியத்தை
நீ
தொடவும் முடியாது

என்னை அறிந்தவன்
புரிய முடியாது
என்னை உணர்ந்தவன்
பிரிய முடியாது
என்றாலும்-
நான்
இப்படித்தான்
என நீ
சொல்லி விடாதே

மாறுவேன்
காலத்திற்கு
காலம்.
மரணிப்பேன்
நிமிஷத்திற்கு
நிமிஷம்.
-ஆனந்தி
"தானாய் கழிந்தது பொழுது"

No comments:

Post a Comment