Friday, December 18, 2009

கவிதை இறகு -மார்கழி

கூத்தாடி அப்பா
தபதப வென மத்தளத்துடன்
தாளமும் சுருதியும் சேர்ந்து கொள்ள
திரையின் கதவுகள் திறக்கப் படுகின்றன
பட்டுக்கோட்டைச் சந்தையிலே
பாட்டுடன் அப்பா பவனி வருகிறார்

கன்னக் கதுப்பில் வண்ணப் பூச்சு
கண்களைச் சுற்றி கருவளையங்கள்
அரிதாரத்தின் அவதாரமாய்
காலின் சலங்கை கலீரென்றிட
அப்பா அங்கே 'அடவு ' பிடித்திட
தப்பாதங்கே தாள வாத்தியம்

வெற்றிலைச் சீவல் மெல்லும் கூட்டமும்
'கள்ளு ' தண்ணியில் கலந்த கூட்டமும்
இருட்டுக் கும்பலில் திருட்டுக் காதலியை
இனம் கண்டிட இயலாமல் போக
கண்ணில் காமமும் கையில் பீடியும்
நினைவைச் சுட்டிட நிமிரும் கூட்டமும்

கடைவாய் கரையில் எச்சிலொழுக
கண்களில் உறக்கம் உச்சிமோர்ந்திட
கோரைப்பாயில் தாரைவார்த்த
கோவணம், சராயில்
குவியல் குவியலாய் பையன்கள் கூட்டமும்

அப்பா வருகையால்
ஆனத்தப்பட்டிடும்

அர்ச்சுனன் முதல் துரியோதனன் வரை
அத்துணைபேருக்கும் தோழன்
சுபத்திரைமுதல் இந்திராணிவரை
அத்துணைபேருக்கும் தோழி
மாதம் மும்மாரி மழை பெய்வதாய்
சாதித்திடும் மந்திரி.. என
அப்பா ஒரு அவதாரப் புருஷன்

ஆயகலைகள் அறுபத்து நான்கும்
அப்பாவிற்கு அத்துப்படியாம்..


முடமாய், ஊமையாய்,
மடையனாய், பேடியாய்
அப்பா செய்யும் சேட்டைகண்டு
கூட்டத்திருக்குக் கொண்டாட்டம்
ஆனால்

எனக்குள் மட்டும் இதயம் அழுதிடும்.

-நாகரத்தினம் கிருஷ்ணா.

No comments:

Post a Comment