Thursday, January 31, 2013

நெடுந்தீவு முகிலன் கவிதை

ஒரு ரொட்டித்துண்டுக்காக
ஒரு டம்ளர் தேனீருக்காக 
என் குழந்தைப் பருவத்தில்
பலரிடம் கையேந்தியிருக்கிறேன். 
"கொடுத்தவர்களுக்குக் கோடி புண்ணிம் 
கிடைக்கட்டும்"

சின்னதில் இருந்தே  அம்மா
தூர தேசம் பயணம் போனதாகப்
பாட்டி கதைசொல்லியிருக்கிறாள்.
இன்னமும் அம்மா திரும்பி வரவில்லை.

எனது தந்தையும் தமையனும்
காணமல் போனார்கள்.
அவர்கள் உயிரோடு இருந்தால் - 
நான் உயிரோடு இருப்பேனா என்றுதான்
சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

இழந்த எனது தேசக் கனவுகளைக்
களத்தில் காயப்பட்டவர்களில்
வடிந்துகொண்டிருந்த குருதியால்
குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன்.
புலனாய்வு என்று கைதுசெய்து விடாதீர்கள்.

இடம் பெயர்ந்த நாட்களில்
எனது கூடாரக் குடிசைக்கு அருகில் இருந்தவர்கள்
தங்களின் ஆடைகளை மாற்றி அணிய 
எனக்கு உதவியிருக்கிறார்கள்.
உள்ளாடைகளை அவர்களிடம் 
எப்படி நான் கேட்பது?

வெள்ளத்தால் நிலத்தின் ஊறலும்
மழையால் பிய்ந்த கூரைக்குள்ளாலான தூறலும்
துவானத்தால் கூதலோடான நடுக்கமும்
இருக்கவோ எழுந்து நிற்கவோ
உறங்கவோ விடவில்லை.

கொண்டுவந்த ஒரே ஒரு முடிச்சுக்குள்
எனது பள்ளிக் கால தேர்வு அட்டைகளும்
கறையான் அரித்த பாட்டியின் மரணசான்றிதழும்.
வளர்த்த  நாயிற்கு வைத்திய சாலையில் ஊசிபோட்ட
பத்திரமுமே மிஞ்சியது.

நாட்கள் கணக்க கடந்ததும்
நானும் விடுவிக்கப்பட்டேன்
விசாரணைக்கு மத்தியில்தான்.

எனது இருத்தலுக்காக எதுவுமே
இருக்கவில்லை... 
எனது
வளவுக்குள் இருந்த வங்கருக்குள்
மனித எலும்புகள் கிடந்தன.
சுடுகாட்டை சுத்தம் செய்ததான அனுபவம் எனக்கு.

குழந்தையாய் இருக்கையில் ரொட்டித்துண்டுகளுக்காகவும்
தேநீருக்காகவுமே பலரிடம் கையேந்தியிருந்தேன் - 
ஆனால் இப்போது நான் குமரியாக இருக்கையில்
எனது கணவனுக்காகவும்
குழந்தைகளுக்காகவும்
யாரிடம் கையேந்துவது?


--நெடுந்தீவு முகிலன்.

No comments:

Post a Comment