Sunday, April 5, 2009

கேள்வி--எங்கள் குழந்தைகளுக்கு என்ன நடந்தது ?


நிலவு கிழிந்து தூங்குகிறது
வேலியில்
நள் யாமம்;
உதிர்ந்து கொண்டிருக்கும் இலைகளின் மேல்
நடந்து திரிகின்றனர்
உயிர் திருகும் எமதூதர்

அடிவளவின் கிணற்றுக்குள்
காலம் காலமாய் புதையுண்டு கிடந்த
பூதங்களும்
இப்பொது சிலிர்த்துக்கொண்டு
கிளம்புகின்றன.

துயிலில் தொலையாது
துயரில் கரையும் இன்றைய இரவில்
இதயத்தை பிடுங்கி
மேசைமீது வைத்துவிடுகிறேன்
குருதி சொட்டச் சொட்டச்
பெருகும் அதன் ஒலிக் குமுறலில்
கொஞ்ச நேரம் நடுங்குகிறது மேசை .

வெளியுலகின் காற்று வாங்கிக்
குளிர்ந்து போய்விடுகிறது இதயம்

அப்போது
விட்ட இடத்திலிருந்து என்னுடைய
கவிதையை தொடங்குகிறேன்

இன்றையை போல
என்றைக்கும் ஒரு கவிதைக்காக
நான் உழன்றது கிடையாது
வெளியில்
நெடுநாளாய் அலைந்தது இக் கவிதை

அதனுடைய ஆரம்பமே
ஒரு கேள்விதான்
கொல்லப்பட்ட நண்பர்களை பற்றி
காணமல் போன நண்பர்களை பற்றிய
ஒரு பெரிய கேள்வி அது

கேள்வியில் பிறபெடுத்த
இந்த கவிதை
திடிரென்று என்னைவிட்டு பிரிந்துசெல்கிறது
நெயயப்படாத வார்த்தைகளுடன்
அறிவால் நெறிப்படுத்த படாத
மிகைஉணர்ச்சியும் சேர்ந்து
பிரவாகம் எடுக்க
இந்த கவிதை பிரிந்து செல்கிறது.

பௌர்ணமி நிலவிலும்
ஒளி தேயாமல் இருளில் கிடக்கிற
அந்த மாடி வீட்டை சுற்றி வருகிறது
இறுகப் பூடப்படிருகும்
அதனுடைய பழங்கால கதவின்மீது
மூர்க்கமாக மோதுகிறது
இறுகிய யன்னல்களுக்கு அருகே சென்று
உன்னிப்பாக கேட்கிறது .


வெளி சுவரில் தெறித்திருக்கும்
குருதி சுவடருகில் நின்று உருகிறது
வீட்டின் வெளிப்புறம்
ஓங்கிய மரங்களில்
இன்னும் ஒட்டிகொண்டிருக்கும்
அவல குரல்களில் தேடுகிறது
இரவுகளில்
கடற்கரையில் காலடி சுவடுகளை
பின்தொடர்ந்து
செல்கிறது
தாழம் புதர்களுள் ஒளிந்திருந்து
குருதியில் நனைகிறது


அலைகளுக்கு மேல் அலைகிறது
அவை புரட்டிவிடும் உடல்களை
திருப்பி திருப்பி தேடுகிறது
கண்கள் இல்லா உடல்களுக்கு
கண்களையும்
முகம் சிதைந்த உடல்களுக்கு
முகங்களையும் தேடி சினக்கிறது

தெருவில் வீசப்பட்ட
ஒற்றை செருப்பின் மீது
வீட்டுப் படிகளில் வீசிஎறியப்பட்ட
மூக்குக் கண்ணாடிமீது
தெரு முனையில் புரட்டி விடப்பட்ட
மோட்டார் சைகிள்ளின் மீது
தயங்கி தயங்கி நிற்கிறது


தகப்பன் தொலைந்த பிறகு
பிறந்த குழந்தைகளின்
பளிங்கு போன்ற விழிகளில்
எதிரொலிப்பது என்ன என்று தெரியாமல்
குழம்புகிறது
தாய்மாரின் கண்ணீர் துளிகளை
ஏந்திக்கொண்டு செல்கையில்
தலை குப்புற வீழ்கிறதுதூக்கு மரங்களின் கீழ்
புதைகுழிகளின் மேல்
முகாம்களின் கோடிபுரங்களில்
மேசைமீது இபோதும்
அபோது போலவே கிடக்கும்
மூடப்படாத பேனையருகில்
முற்றுப் பெறாத கடித வரிகளில்


சுவரில் தூங்கும் படங்களில்
அறையில் சிந்தியிருக்கும் ஆடைகளில்
பூவாத பூவரசுகளில்
ஈர பனையில்
ஓர கூந்தலில் ஒற்றை மலரில்

நின்று பம்பரம் போல சுழல்கிறது

காற்றிலும் வெளியிலும்
மூடப்பட்ட எல்லா இரும்பு கதவுகளிலும்
புகை கசியும் எல்லா துபபாகிகளிலும்
அறைந்து கேட்கிறதுஎங்கள் குழந்தைகளுக்கு என்ன நடந்தது ?நீ இபொழுது இறங்கும் ஆறு - சேரன் .

3 comments:

 1. ஈழத்தில் மனித உயிரின் பெறுமதி இவ்வளவுதான்!

  ReplyDelete
 2. இது உங்கள் தலைவர் ஆனந்தசங்கரிக்கு தெரியவில்லையே அவட் மஹிந்தவுக்கு இப்பவும் அடிவருடுகின்றாரே இதனைச் சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லை தங்க முகுந்தன்

  ReplyDelete
 3. கண்கள் குளமாகின்றது....

  தெய்வமே நீ உறங்கி
  எத்தனை நாளாகியது...
  எம் குழந்தைகளின் கதறல்
  உன்னை உசுப்பவில்லையா?...

  காத்திரு உன்னை
  கற்பழிக்க வரும்வரை
  காத்திரு...

  ReplyDelete