Friday, July 19, 2013

ஒரு மரத்தின் பெருவாழ்வு


எங்கோ வளர்ந்த மரங்கள்
நமக்கான கனிகளை அனுப்பிக்கொண்டிருப்பது
பக்கத்திலிருக்கும் மரங்களை
பாதுகாப்போம் என்கிற நம்பிக்கையில்தான் .




முதல் இலையின் துளிர்த்தலுக்கும்
கடைசி இலையின் உதிர்தலுக்குமிடையிலிருக்கிறது
ஒரு மரத்தின் பெருவாழ்வு .




இலைகளற்ற தனிமையை
கடப்பதுதான்
மரங்களுக்கும் பெரும்பாடு .




இரைதேடிச் சென்ற பறவை
கூடு திரும்பும்வரை
குஞ்சுகளைத் தாலாட்டும் மரக்கிளை .




காடு
என்கிற சொல்லுக்குள்
எத்தனையெத்தனை மரங்கள் .




எல்லாவற்றையும்
கொடுத்துவிடுகின்றன மரங்கள்
பிறகும் கொலை செய்கிறோம்.




மரங்களிடமிருந்து விடைபெற மனசின்றி
வீட்டிற்குத் திரும்பினேன்
சட்டைப்பையிலிருந்தது ஓர் இலை.


-குகை மா.புகழேந்தி

Saturday, July 13, 2013

கவிதை இறகு - ஆனி

முகம் பூத்த நிறங்கள்
கோடைக்குப் பின்னான 
முதல் துளிர்ப்பின் தயக்கத்தில் 
வரையத் தொடங்கினாள் சிறுமி 
தன் வளையலால் வட்டத்தை 
அருகமர்த்திய இரு மலைகளிடையே 
மற்றொருத்தி சூரியனை திணித்துக்கொண்டிருந்தாள் 
மேலும் சிலரோ 
கட்டங்களில் வீட்டையும் 
ந-இட்டு காகத்தையும் 
எப்படியேனும் 
சுதந்திரக்கொடியை பறக்கவைத்துவிட கம்பத்தையும் 
ஐந்தில் நாயையும் வரைந்து 
காய்ந்த ஜவ்வரிசிக் கஞ்சியை 
உடைத்துடைத்து ஒட்டி 
பூசிய நிறங்களால் 
பளிங்குச் சிலையென தகதகக்க 
திருப்தியின் கீற்றுகள் வழிந்தன 
முகமெங்கும் வர்ணங்களாக...
-ந.பெரியசாமி.

சாபம் அய்யா


கண்மணி குணசேகரன் கடிதம் எழுதியிருந்தார்.
'மணக்கொல்லைக்கு' அழைத்திருந்தார்.

ஒரு முற்பகலில்
ஊரைச் சுற்றிக் காட்டினார்.

ரெட்டியார் கிராமம்.
பத்து பன்னிரெண்டு போலத்
தோட்டமும் வீடுமாகப் பெரிய ஓட்டு வீடுகள்.
இடையிடையே சில இடிந்து கிடந்தன.
எருக்கு முளைத்திருந்தது.

"சாபம் அய்யா-
கழுத விழுந்து பொரளணும்!
குடியத்துப் போவணும்!"

டு இந்த வீடு இன்னு
சில ரெட்டியாருங்க வந்து கும்புடுவாங்க.
இங்க நின்ன இதான் பறவீரன் கோயில்.
அது பறவீரன் குளம்.
அந்த வீஒரு அழிஞ்சி மரத்துலதான்
தல கீழா தொங்கவுட்டு
வைக்கோலப் போட்டு கொளுத்துனாங்களாம்

இதான் அந்த நெலம்
அந்தப் பஞ்சத்துலயும் இந்தக் கொல்லையில
அப்புடி கம்பு வெளஞ்சிருந்துதாம்.
தோ, புலியூரு
அந்தப் பக்கத்துல இருந்து வந்துதான்
ஒரு ராத்திரி கம்ப அறுத்துட்டானாம்

கேள்விப் பட்டு வந்த அவன் பொண்டாட்டி
நெறமாத கர்ப்பிணி-
'பசிக்குத் திருட வந்தவன,இப்புடி
பண்ணிப்புட்டீங்களேடா பாவிவோளா'ன்னு
மண்ண வாரிவுட்டு அழுது பெரண்டாளாம்.

அப்ப,
அப்ப அடிச்சி உட்டுடலாமுன்னு தடுத்துவுங்க குடும்பங்க
இப்ப வித்து மாறிகிட்டிருக்குது
கொளுத்னவனுவோ வீடுங்க
எருக்கு மொளச்சி கெடக்குது"

நின்று நினைத்தேன்:
கோயில், அடையாளம் என்று நின்ற வேல்,
நாவாக அசைந்து சொன்னது.
'பறையன்,
பறையனா இருந்தா கொளுத்துவானுங்க.
வேரறுக்கும் 
வீரனா இருந்தா கும்புடுவானுங்க'.

-பழமலய் 

முயற்சி


சறுக்கல் விளையாட
ஆசைப்பட்டான்.
‘சார்
ஏறி, ஏறி
சறுக்கப் போகிறேன்''
‘மாற்றிச் சொல் குழந்தாய்
சறுக்கச் சறுக்க
ஏறப் போகிறேன்.''
சறுக்கல் இயற்கை
ஏறுதலே முயற்சி.

-பழ.புகழேந்தி

Wednesday, June 12, 2013

கவிதை இறகு -வைகாசி



அப்பாவிச் சாட்சியின் கேள்விகள்

நெல்லும் கரும்பும் விளைந்த வயலில்
அடுக்கு மாளிகையின் அஸ்திவாரப் பள்ளத்தை
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்
எந்திரமாய் இயங்கும் 
பெண்களின் கைகளில்
மண்சட்டிகள் மாறிக் கரையேறுகின்றன
ஆண்கள் உயர்த்தும் கடப்பாறைகள்
பூமியின் மார்பைக் குத்திக் கிழிக்கின்றன

வேகத்தைக் கண்டு வியப்பில் கண்மலர
வேடிக்கை பார்க்கிறான் ஒரு சிறுவன்
பச்சை வயல்களை ஏன் அழிக்கிறீர்கள்
என்று அவன் கேட்கவில்லை

நெல்லும் கரும்பும் இனி எப்படி விளையும்
என்று அவன் கேட்கவில்லை
நெல் இல்லாமல் இருப்பது எப்படி
என்று அவன் கேட்கவில்லை
இந்த உலகம் இருக்குமோ 
என்றும் அவன் கேட்கவில்லை
இனி தும்பிகளை எங்கே போய்த் தேடுவேன்
என்றும் அவன் கேட்கவில்லை

இன்று அவன் ஒரு அப்பாவிச் சிறுவன்
மோசடிக் கும்பலின் நாசகாரியம்
முடிவுற்ற பின்னாலாவது
இக்கேள்விகளை முன்வைக்கக் கூடும் அவன்
அப்போது உலகம் தரும் பதில் என்ன ?


-பாவண்ணன்.

கவிதை இறகு -சித்திரை


தனித்து தோப்பாகு
கண் துடைக்க மாட்டேன்
ஒரு கவளம் ஊட்டமாட்டேன்
தலைகோதி
ஆறுதல் தரவும் மாட்டேன்
துக்கத்திற்கான ஆறுதல்
என்னிலிருந்து கிடைக்காது

ஆறுதல் உனது மோட்சத்தை
எந்திரத்திலிட்டு மாவாக்கியது
உதிரப்பாசம்
உச்சியிலிருந்து வீழ்த்தியது

என் மென்மையான இறகின் கீழ்
நீ கதகதப்பாய் இல்லை
கருகிப் போனாய்

நீ நீயாக இருக்கும் பொருட்டே
விரட்டுகிறேன்
தாய்க்கோழியாய்.

புரிந்து கொள்
மிகு பாசத்தில் நெட்டி வளர்த்தால்
பள்ளிப் பிள்ளையாய்
பலப்பம் தின்பாய்
கண்டெடுக்கச் சொல்லி கத்தினால்
பழத்தின் முள்பிளந்து
வாழ்வின் ருசியறிவாய்.

-எழில்வரதன்.

Tuesday, March 19, 2013

கவிதை இறகு - பங்குனி

நினைவில் காடுள்ள மிருகம்

நினைவில் காடுள்ள மிருகம்
எளிதில் அடங்குவதில்லை
அவள் தோளில்
சதுப்பு நிலங்களின் குளிர்
அவள் முடிக்கற்றைகளில்
வனப்பூக்களின் கடும்நெடி


அவள் விழிமணியில்
பாறைகளில் தெறித்துவிழும்
காட்டுச் சூரியன்
அவள் வாயில் காட்டாறுகள்
சந்திக்கின்றன.
அவள் நாவில் காட்டுத்தேன்
ஊறுகிறது


அவள் செவிகளில்
இடிமேகங்கள் முழங்குகின்றன
அவள் ரத்தத்தில்
காட்டுயானைகள் பிளிறுகின்றன
அவள் இதயத்தில்
காட்டு நிலவுகள் பூக்கின்றன


அவளது சிந்தனைகள்
காட்டுப் பாதைகளினூடே
பாய்ந்து செல்கின்றன
நினைவில் காடுள்ள மிருகம்
எளிதில் அடங்குவதில்லை
என் நினைவில் காடுகளுண்டு


மலையாளம்  சச்சிதானந்தன்
தமிழில் நிர்மால்யா