Friday, February 8, 2013

ஸ்னேகிதம்

உன்
மௌனம்
எனக்குத் தெளிவாய்ப்
புரிகிறது...
உன் பேச்சு
என்னை மிகவும்
குழப்புகிறது...
பேசாமல் இரு.
நாம் பேச வேண்டியதை
நம் மௌனங்கள்
பேசிக் கொள்ளட்டும்...
மெள்ள் மெள்ள
ஆனால்
மிகத் தெளிவாய்..

- பா.செந்தாமரை
பொத்திப் பொத்தி
பூத்த
மௌனப் பூக்களை
சூடிக் கொண்டலைகிறாய்
சத்தமிட்டு சத்தமிட்டு
சருகாகிக் கிடக்கிறேன்.

- முருகன்.
 ஸ்னேகிதம்

நேற்று நீ மறந்து போனாய்
போகையில் முத்தம் கொடுக்க
மறுபடி மறுபடி நெஞ்சில்
இக்குறை வந்து தாக்க
பூக்களை முத்தமிட்டேன்
புற்களை முத்தமிட்டேன்

காகிதம்,பேனா,பென்சில்
கடக்கின்ற காற்று, கை விரல்
ஒவ்வொன்றாய் முத்தமிட்டேன்.

நேற்று நீ மறந்து போனாய்
ஊர் முழுக்க ஸ்னேகிதமாச்சு
திடுமென்று நினைவு மின்னி
மறுபடி எனைப் பார்க்க வந்தாய்

உன் பக்க கணக்கு முழுவதும்
வெட்கமின்றி சொல்லுவாயோ.

- பாலகுமாரன்.
என்றாவது ஒருநாள்
வற்றக்கூடும் என் கண்ணீர்
அன்று எண்ணிக்கொள்
நீ எறிந்த கற்களை.

-கவிதாயினி ராஜேஸ்வரி.

நான்
உன் கதவைத் தட்டுகிறேன்
வாசலின் அந்தப் பக்கம் இருந்து

நீ உன் வாசலின் மறுபக்கம்
திறந்துவிட்டாய்
உனது கதவை

ஆனால்
நாம் இன்னும்
சந்திக்கவேயில்லை.

-அப்பாஸ்.

மானம் பாத்த பொழப்பு


மானம் பாத்தப் பொழப்பும்
மலையேறிப் போச்சி.
என் மானம் காத்த ஒழவும்
மண்ணாப்போச்சி.
தானமா வந்த தண்ணியும்
திடுக்குனு நின்னுபோச்சி.

வறண்ட பூமி பாத்து
திரண்ட கண்ணீரப் பாத்தும்
இறங்கலையே அந்த ஆகாசமேகமும்.
இரங்கலையே எந்த அரசாளும்மனசும்.

வக்கத்த போக்கு பாத்து
நாம்பெத்த மக்களெல்லாம்
வெக்கமத்து என்னை வெட்டிவுட்டு
கக்கத்துப் பொட்டியோட காரேறிப் போயாச்சி.

கெக்கலிக்கிற புழுதிக்காடு பாத்தும்
எக்களிக்கிற எந்திரவிவசாயம் பாத்தும்
துக்கத்தால் தொண்ட விக்கித்துப் போச்சி.

சொல்லி அழவும் நாதியத்தவனா
ஒட்டுத்துணியும் ஒட்டுனவயிறுமா
இத்துப்போன ஏத்தக்காலோரம்
இடிஞ்சிபோயி உக்காந்திருக்கேன்.

மாடா உழைச்ச கழனியெல்லாம்
காடாக்கிடக்கிறதக் காணச்சகியாம,
என்னயக் காடுகொண்டுபோவ
வாடா காலான்னு வழியிலயே
காத்திருக்கேன்.

- கீதமஞ்சரி .

Thursday, January 31, 2013

உங்களை அறிந்துகொள்ளுங்கள்


*உங்களை  அறிந்துகொள்ளுங்கள் *

ஸ்டாலின் என்றதும்
உங்கள் நினைவு முதலடுக்கில்
வந்து நிற்பது யார் ?
1 ..............2 ..............3 ..............4 ............. 

எண் ஒன்றெனில்
நீங்கள் வெகுஜன அரசியலில் ஆர்வமுள்ளவர்
இரண்டெனில்
நீங்களொரு தீவிர வாசகர்
மூன்றெனில்
நீங்களொரு கம்யூனிஸ்ட்
அல்லது எதிர்ப்பாளர்
நான்கெனில்
நல்லது
நீங்கள் பாக்கியவான்
நீங்கள் நிம்மதியானவர்
நீங்கள் சுயநலவாதி
நீங்கள் வெகுளி
நீங்கள் ஞானசூன்யம்
எதுவாகவுமிருக்கலாம்.


-யாழினி முனுசாமி.

நெடுந்தீவு முகிலன் கவிதை

ஒரு ரொட்டித்துண்டுக்காக
ஒரு டம்ளர் தேனீருக்காக 
என் குழந்தைப் பருவத்தில்
பலரிடம் கையேந்தியிருக்கிறேன். 
"கொடுத்தவர்களுக்குக் கோடி புண்ணிம் 
கிடைக்கட்டும்"

சின்னதில் இருந்தே  அம்மா
தூர தேசம் பயணம் போனதாகப்
பாட்டி கதைசொல்லியிருக்கிறாள்.
இன்னமும் அம்மா திரும்பி வரவில்லை.

எனது தந்தையும் தமையனும்
காணமல் போனார்கள்.
அவர்கள் உயிரோடு இருந்தால் - 
நான் உயிரோடு இருப்பேனா என்றுதான்
சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

இழந்த எனது தேசக் கனவுகளைக்
களத்தில் காயப்பட்டவர்களில்
வடிந்துகொண்டிருந்த குருதியால்
குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன்.
புலனாய்வு என்று கைதுசெய்து விடாதீர்கள்.

இடம் பெயர்ந்த நாட்களில்
எனது கூடாரக் குடிசைக்கு அருகில் இருந்தவர்கள்
தங்களின் ஆடைகளை மாற்றி அணிய 
எனக்கு உதவியிருக்கிறார்கள்.
உள்ளாடைகளை அவர்களிடம் 
எப்படி நான் கேட்பது?

வெள்ளத்தால் நிலத்தின் ஊறலும்
மழையால் பிய்ந்த கூரைக்குள்ளாலான தூறலும்
துவானத்தால் கூதலோடான நடுக்கமும்
இருக்கவோ எழுந்து நிற்கவோ
உறங்கவோ விடவில்லை.

கொண்டுவந்த ஒரே ஒரு முடிச்சுக்குள்
எனது பள்ளிக் கால தேர்வு அட்டைகளும்
கறையான் அரித்த பாட்டியின் மரணசான்றிதழும்.
வளர்த்த  நாயிற்கு வைத்திய சாலையில் ஊசிபோட்ட
பத்திரமுமே மிஞ்சியது.

நாட்கள் கணக்க கடந்ததும்
நானும் விடுவிக்கப்பட்டேன்
விசாரணைக்கு மத்தியில்தான்.

எனது இருத்தலுக்காக எதுவுமே
இருக்கவில்லை... 
எனது
வளவுக்குள் இருந்த வங்கருக்குள்
மனித எலும்புகள் கிடந்தன.
சுடுகாட்டை சுத்தம் செய்ததான அனுபவம் எனக்கு.

குழந்தையாய் இருக்கையில் ரொட்டித்துண்டுகளுக்காகவும்
தேநீருக்காகவுமே பலரிடம் கையேந்தியிருந்தேன் - 
ஆனால் இப்போது நான் குமரியாக இருக்கையில்
எனது கணவனுக்காகவும்
குழந்தைகளுக்காகவும்
யாரிடம் கையேந்துவது?


--நெடுந்தீவு முகிலன்.

Friday, January 18, 2013

கவிதை இறகு - "தை"

ஒழுக்கம்

ஒழுக்கம் பற்றிய குறிப்புகளைத்
தொலைத்துவிட விரும்புகிறேன்.
முடிந்தமட்டும் அதன் பிரதிகளை கிழித்தெறிகிறேன்.
நீதிக் கதைகளை
புராணங்களின் கதைவழியே ஊடுருவும்
நல்லொழுக்கத்தை
பாடப் புத்தகங்கள் வழியே
உடலுக்குள் நுழைந்த நீதிநூல்களை
எல்லாவற்றிடமிருந்து விலகிவருகிறேன்.
இன்னும் காதல் வழியாகவும்
அன்பின் வழியாகவும் நுழைந்த
ஒழுக்கவழிகளை அப்புறப்படுத்திவிட்டேன்.
ஒழுக்கம் வெற்றுச் சொல்லாக மாறிக் கொண்டிருக்கிறது.
எல்லாவித ஒழுக்கத்தின் வாசனையைத் 
தாண்டிவருகிறேன்.
ஒழுக்கத்தைக் கலைந்த மனிதனாக
முதலில் தெருவிலிறங்கி நடக்கின்றேன்.
எதிரே ஒரு பெண் வந்து கொண்டிருக்கிறாள்.
அவள் கண்கள் பிரகாசமாயிருக்கிறது.
அவள் துடைத்துவிட்ட நீலவானம் போல
பளிச்சென்றிருக்கிறாள்.
அவளிடம் நீ அழகாயிருக்கிறாயென்று
சொல்ல நினைத்து தோற்கிறேன்.
அந்த வெட்கம் கெட்ட ஒழுக்கத்தின் வாசனை
எனக்குள் எங்கோ மிச்சமிருக்கிறது.

ஒரு குகையில் கடவுளிருக்கிறான்
இன்னொரு குகையில்
தூய்மையான தண்ணீர் இருக்கிறது
தாகமுள்ளவன்
எந்தக் குகையில் நுழைவான்
ஒரு குகையில் புனித நூல்களிருக்கின்றன
இன்னொரு குகையில் உணவு இருக்கிறது
பசித்தவன் எந்தக் குகையை விரும்புவான்
ஒரு குகையில் பிரார்த்தனை நடந்து
கொண்டிருக்கிறது.
இன்னொரு குகையில் தூய்மையான
ஆடை இருக்கிறது
நிர்வாணமாயிருப்பவன்
எந்தக் குகையில் நுழைவான்
ஒரு குகையில் பெண்ணிருக்கிறாள்
இன்னொரு குகையில் ஒரு கரடி இருக்கிறது
காதல் கொண்டவன் யாரை விரும்புவான்
நான் தாகமுள்ளவனாக இருக்கிறேன்
நான் பசித்தவனாக இருக்கிறேன்
நான் நிர்வாணமாக இருக்கிறேன்
நான் காதலோடு இருக்கிறேன்

-கோசின்ரா.

Monday, December 24, 2012

மின்னல்


ககனப் பறவை
நீட்டும் அலகு

கதிரோன் நிலத்தில்
எறியும் பார்வை

கடலுள் வழியும் அமிர்த தாரை
கடவுள் ஊன்றும் செங்கோல்

- பிரமிள் .

கவிதை இறகு -மார்கழி

பயணம் முடிந்த பின்பு
நழுவ விட்ட பஸ் டிக்கெட்

டைப்ரைட்டர் உருளையிலே
பட படக்கும் கார்பன் தாள்

மலைச்சாரல் சாய்ந்திறங்கி
நனைக்காத சாலை ஓரம்

அசைகின்ற வைப்பர் நுனி
துடைக்காத மழைப் புள்ளி 

 நிராகரிப்பின் சின்னச் சின்ன 
விசும்பல்கள் எனக்குள்ளே 

 -தி.சந்தானம்
 "நீ...நான்...மற்றும்.."