Monday, December 19, 2011

பசுந்தரை

கருகாத தவிப்புகள் கூடி
நாவின் திரி பிளந்து
அணையாது எரியும் ஒருபெயர்
நீ!
புதுநெருப்பில் இடைபுதைத்து
வெளியில் எரியும் வகிடெடுத்து
திரண்டு சிவந்தவள்
நீ!

என்நரம்பு வலைதொறும் விரியும்
உன்தீத் தளிர் வடிவுகளை
என் தழுவல்கள் கவ்வி
மின் நதியைப் புணரும்
சர்ப்பச் சுருணைகளாய்
எரிந்து சிந்த
மீண்டும் என்
பஸ்மத்திலிருந்தே
படம்புடைத்தெழுகிறேன்
உன்மீது சரிகிறேன்.
எரிவின் பாலையிலிருந்து மீண்டு
உன்தசைப் பசுந்தரையில்
என்வாய் பாதம் பதிக்கிறது.
பற்கள் பதிந்தகல
இதோ உன்மீதென்
முதிராத யுவ நடையில்
தத்தளித்த முத்தங்கள்.
நீ தரும் பதில் முத்தங்களின்
மதுர வெளியில் மீண்டும் என்
உதிரம் அலைகிறது.

பாலையில் படர்கிறது
பசுந்தரை.


-பிரமிள்.

வீடு முழுவதும் நட்சத்திரங்கள்

ஒளிரும் நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டிருக்கும்
அக்ஷயாவை எனக்குப் பிடிக்கும்
பகல் பொழுதுகளில்
தேம்பியழும் அவளுக்கு
புற்களில் பூத்த
மஞ்சள் பூக்களைக்
காட்டி வைத்தேன்.

வாசலின் புங்கை மரக்கிளைகளில்
பற்றிப் படரும்
கோவைப் பழங்களைத்
தின்னவராத அணில்களை நான்
தேடுகையில்
அவள் நட்சத்திரங்களைப் பறித்துவிட்டாள்.
நட்சத்திரங்களைச் சூடிக்கொண்டிருக்கும்
அக்ஷயாவில் நான் சொக்கிப்போகிறேன்
அவள் கைகள் நிறைய நட்சத்திரங்கள்
அவற்றை அவள்
பொம்மைக்குச் சூடுகிறாள் என்
புத்தகங்களில் இறைக்கிறாள்
வீடு முழுவதும் நட்சத்திரங்கள்
அணில் வந்துவிட்ட வேளை
நட்சத்திரங்களை அக்ஷயா
கசக்குகிறாள்
அடுத்த பகற்பொழுதில் பூக்கத் தவறிய
நட்சத்திரங்களுக்காகத் தேம்பியழும்
அக்ஷயாவை மெல்லத் தூங்கச் செய்கிறேன்
கோவைப் பழங்களைத் தின்ற
அணில்களின் கண்கள்
நின்று ஒளிர்கின்றன.

-பத்மபாரதி.

பயிரைப் பிடுங்கி நட்டவர்கள்

பயிரைப் பிடுங்கி நட்டவர்கள்
நிலத்தை விற்று
தானியங்கி எந்திரத்தில்
பணத்தைப் பிடுங்கப் போக
மயிரைப் பிடுங்கி நடும்
விஞ்ஞானம்
வயிற்றுக்காக இனி
பசியை பிடுங்கிப்போனால் சரி.

- நா.கோவிந்தராஜன்.

கவிதை இறகு -மார்கழி


லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்று நிகாரகுவா. 1979 ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாள், நிகராகுவாவின் சர்வாதிகாரியும், அமெரிக்க உதவியுடன் ஆட்டம் போட்டவனுமாகிய அனஸ்டூடசியோ சமோசாவின் ஆட்சி வீழ்த்தப்பட்டு மக்கள் வெற்றி கண்ட மகத்தான நாள். இத்தேசியப் புரட்சியில் பங்கு கொண்ட இடானியா என்ற பெண் போராளி 8.3.1979 தேதியில் தனது மகளுக்கு எழுதிய கடிதம் கீழே தரப்படுகிறது. 16.4.1979 அன்று சமோசாவின் இராணுவத்தால் கொல்லப்பட்டபோது இப்போராளியின் வயது 26.

இடானியாவின் கடிதம்!

எனது அன்பு மகளே,

எல்லா இடங்களிலும் மக்களுக்கு
இது ஒரு முக்கியமான நேரம்.
இன்று நிகராகுவாவில்,
நாளை பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில்,
பிறகு உலகம் முழுவதும்.

புரட்சி
ஒவ்வொருவராலும் தரமுடிந்த அனைத்தையும் கோருகிறது.
நமது மனசாட்சியும்தான்.

தனி மனிதர்களான நாம் பிரத்யேகமாகச் செயல்பட்டு
இந்த உருவாக்கத்தில் இயன்றளவு,
உதவிடவேண்டி வலியுறுத்துகிறது.

விரைவிலேயே ஒருநாள்
சக மனிதர்களைப் போல வளர்ந்து முன்னேறி,
விரோதிகளாக அல்லாமல், சகோதர சகோதரிகளாக
சுதந்திரமான சமூகத்தில் வாழ்வது,
உனக்கு சாத்தியமாகுமென்று நம்புகிறேன்.

அப்போது உன்னுடன் கைகோர்த்து வீதிகளில் செல்லும்போது
எல்லோரும் புன்னகைப்பதை குழந்தைகள் சிரிப்பதை
பூங்காக்கள் நதிகளையெல்லாம் பார்க்க விரும்புகிறேன்.

நமது மக்கள் மகிழ்ச்சியான குழந்தைகளாக வளர்வதையும்,
புதிய மனிதர்களாகவும்
எங்குமுள்ள மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை
உணர்ந்தவர்களாக மாறுவதையும் கண்ணுற்ற நாம்
மகிழ்ச்சியுடன் புன்னகை செய்வோம்.

நீ அனுபவிக்கப் போகும் அமைதியும், சுதந்திரமும் கொண்ட
சொர்க்கத்தின் மதிப்பை நீ அறிந்து கொள்ள வேண்டும்.
நான் ஏன் இதைச் சொல்கிறேன்?

ஏற்கனவே நமது மக்கள் வீரத்தில் சிறந்தவர்கள்.
சமூகத்தின் மீதும், சுதந்திரத்தின் மீதும், அமைதியின் மீதும்,
தமக்குள்ள ஆழ்ந்த அன்பினால்,
நாளைய தலைமுறையினருக்காகவும்,
உன்னைப் போன்ற குழந்தைகளுக்காகவும்
தங்கள் ரத்தத்தை தந்துவிட்டார்கள்,
மிக்க விருப்பத்துடன்.

நமது அழகான நிகராகுவாவின்
எத்தனையோ ஆண்களும், பெண்களும், குழந்தைளும்,
அடக்குமுறையிலும், அவமானத்திலும், வேதனையிலும்
துடிப்பது போல இனி ஒரு போதும் துடிக்கக் கூடாது
என்பதற்காக
அவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துவிட்டார்கள்.

ஒருவேளை நான் இவற்றையெல்லாம்
உன்னிடம் நேரில் சொல்லமுடியாமல் போகலாம்.
வேறொருவர் சொல்வதும் முடியாது போய்விடலாம்,
என்பதால் உன்னிடம் சொல்கிறேன்.

அன்னை என்பவள் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பவள் மட்டுமல்ல,
எல்லாக் குழந்தைகளும் தனது கருப்பையிலிருந்து தோன்றியவர்கள் போல,
எல்லா மக்களின் வலிகளையும்
அன்னை என்பவள் நன்கு அறிவாள்.

ஒரு நாள்
நீ
மனித குலத்தின் மீது பேரன்பு கொண்ட
உண்மையாக பெண்ணாக உருவாக வேண்டும்
என்பதே என் விருப்பம்.

நீதியை யார் எப்போது குலைக்க முயன்றாலும்,
அதை எதிர்த்து நின்று காப்பது எப்படி என்று
உனக்கு எப்போதும் தெரிந்திருக்க வேண்டும்.

அப்படி நீ மாறவேண்டுமானால்,
நாம் நாட்டுப் புரட்சியின் தலைவர்களும்,
பிறநாட்டுப் புரட்சியின் மாபெரும் தலைவர்களும்
எழுதிய புத்தகங்களை
நீ படித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.

அனைத்திலும் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்தி
அதன் மூலம் வளர்ச்சியைத் தொடர வேண்டும்.
நீ இதைச் செய்வாய்!
உன்னால் முடியுமென்று எனக்குத் தெரியும்.

உனக்கென
வார்த்தைகளையும், வாக்குறுதிகளையும், வெற்றுப்போதனைகளையும்
விட்டுச் செல்ல நான் விரும்பவில்லை.

உனக்கென நான் விட்டுச்செல்ல நினைப்பது
வாழ்க்கை பற்றிய ஒரு கண்ணோட்டத்தை.
என்னுடையதையும்
(அதுதான் சிறந்தது என்று நான் நினைக்கவில்லை என்றாலும்)
எனது சான்டினிஸ்டா சகோதர – சகோதரிகளுடையதையும்
உனக்கு விட்டுச் செல்கிறேன்.
அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்று
நீ கற்றுக் கொள்வாயென்று எனக்குத் தெரியும்.

சரி, என் குண்டுப்பெண்ணே,
உன்னை மறுபடியும் பார்க்கும் பேறு எனக்கு கிடைத்தால்?
அதுகூட சாத்தியம்தான்.
வாழ்க்கை பற்றியும் புரட்சி பற்றியும் நாம் நீண்டநேரம் பேசுவோம்.

நமக்குக் கொடுக்கப்படும் செயல்களை
கடினமாக உழைத்து நிறைவேற்றுவோம்.
கிடார் வாசித்து, பாட்டுப்பாடி ஒன்றாக விளையாடுவோம்.
ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொள்வோம்.

வா,
பூவையும் சுதந்திரத்தையும் போன்ற
உன் அழகு முகத்தை எனக்குக்காட்டு!

உன் சிரிப்பையும் நமது யதார்த்தத்தையும் பிணைத்து
நான் போராடுவதற்கான சக்தியைக்கொடு!

தினமும் உன்னைப்பற்றியே நினைக்கிறேன்.
நீ எப்படியிருப்பாய் என்று கற்பனை செய்கிறேன்.

எப்போதும் உன் மக்களை
மனித குலத்தை நேசி!
உன் அம்மாவின்
அன்பு முழுவதும் உனக்கே!
◦இடானியா.

“என்றென்றைக்குமான வெற்றி கிட்டும் வரை
சுதந்திரத் தாய்நாடு அல்லது வீரமரணம்”

-”சான்டினோவியப் புதல்விகள்” ஆங்கிலப் புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பு: அமரந்தா.

Wednesday, November 16, 2011

கவிதை இறகு -கார்த்திகை

கூடவே

இயன்ற அளவு சத்தமிடாமல் உருட்டி
அந்த பழைய சைக்கிளை
சிதம்பர நகர் மக்கள் நல சங்க
பேருந்து நிழற்குடையின் ஓரம்
சாய்த்துவைக்கிறார்

சைக்கிளை விடவும் துருப்பிடித்த உடம்புடன்
மருதாணிப் பூ வாசமடிக்கும்
பின் வீட்டை நோக்கி முதுகு திருப்பி
அமர்கிறார் பீடி புகைத்து.
யாரிடமும் மணி கேட்பதேயில்லை
அவர் நேரம் அவருக்கு தெரியும்
மஞ்சள்நிற பொறியியல் கல்லூரி வாகனம்
வந்துபோனதும் அவர்
அப்புறப்படுகிறார் சிலுவையின் ஆணிகளிலிருந்து.
சிறுநீர் கழிக்கிறார் பூவரச மரத்தடியில்.
பார்வை பதிவது சாந்திநகர்
பஸ் வரும் திசையில்

வேர்க்கடலை வண்டியின் காடா விளக்கு
வெளிச்சமாகப் பரவுகிறது
முகத்தில் ஒரு நடுங்கும் சிரிப்பு.
நகலகக் கடையின் இன்னொரு கழிவுத்தாள் என
கசங்கிய முகத்துடன்
கைபேசியபடியே இறங்கும் பெண்ணிடம்
பையை வாங்கிக் கொள்கிறார்.

சைக்கிளை அந்தப் பெண் மிதிக்க
பின்னால் அமர்ந்திருக்கும் அவருடன்
இருட்டுத் தெருவுக்கு வழி சொன்னபடி
கூடவே போகிறது
இருமல் சத்தமும்.

-கல்யாண்ஜி.

Saturday, October 22, 2011

கவிதை இறகு - ஐப்பசி

நெசமாத்தானுங்களாண்ணா?

காற்றின் பெருவெளிகளில்
தென்னைகளை அழித்த
இறுமாப்பில் சுழலும்
அசுர காற்றாலைக் கரங்கள்
புல் தேடி அலையும்
கால்நடைகளின் வாய்களில்
படர்கின்றன பாலீதீன் அரக்கர்கள்
வீடுகளில் வலைகளுக்கு
பின்னாலிருக்க கற்றுக் கொண்டு
கொடுக்கப்படும் இரைகளை
உண்டு உறங்க பழகி
பல வருடங்களாகிவிட்டன

குருவிகளுக்கு
மரங்களை பார்க்கவென்று
சிறப்பு சுற்றுலா திட்டம்
செயல்படுத்தப்படுகிறது
ஒவ்வொரு பள்ளியிலும்
ஓசோனின் ஆயுளுக்காக
வருடத்தில் ஒருமுறை
ஒருமணி நேர மின்சார நிறுத்தமாம்
உலகெங்கும்
மரபணு விதைகளும்,இறக்குமதி உரங்களும்
மண்ணின் உயிரை உறிஞ்சியபடி
படிகளற்ற கிணறுகளில்
பாகம் பிரித்துக்கிடக்கின்றன
ஆழ்துளைக் கிணறுக் குழிகள்
வறண்டு கிடக்கும் வாய்க்கால்களில்
வலை பின்னி கிடக்கும் சிலந்திகள்.
ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகின்றன
தள்ளுவண்டிகளில்
கேழ்வரகு, கம்பங்கூழ்கள்
தொலைக்காட்சி தொடர்களின்
நேரத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகின்றன
விவசாயப் பணிகள்.
மனைகள் பிரித்தது போக
மீதிக் கிடக்கும்
மேட்டுக்காட்டுக் குடிசையில்
பிளந்து கிடக்கும்
மாட்டுவண்டி சக்கர
கோணல் அச்சாணிக் கம்பிகளில்
கிழிந்து தொங்குகிறது
விவசாயிகளின் இற்றுப்போன கோவணத்துணிகள்
ஊடகங்களிலும் புத்தகங்களிலும்
அடிக்கடி தட்டுப்படும் வார்த்தை!
"இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு
விவசாயம்"

- ஜெ.பாலா.

Tuesday, October 11, 2011

இதயத்தில் பதியனிட ஏதுவாய்....

துயரப்பிரிவின் மடியில்
துவண்டுறங்குகையில்
நித்திரையின் கரம்பற்றி
நீள்கிறதோர் கனவில்
ஆவாரஞ்செடிகள்
அடர்ந்திருக்கும் வெளியின்
ஆம்பல் குளமருகே
ஆழ்ந்தென் விழிநோக்கி
அறிவிக்கிறாயுன் நேசத்தை...

சந்திப்பின் முடிவில்
பசுமையினிழைகளோடும்
வெண்பட்டுக் கூம்பென
விரிந்திராத மொட்டினைக்
கொடுத்துப் போகிறாய்
குழந்தையின் முறுவலுடன்..

அல்லியை விடவும்
அழகாயிருக்கிறது
அதன் தண்டு...
ஈரம் பொதிந்ததாய்..
இதழினும் பளபளப்பாய் ..
இதயத்தில் பதியனிட ஏதுவாய்....

தாயின் இடுப்பினின்று
தரையிறங்க நழுவுமோர்
மழலையின் துள்ளலுடன்
மலர்த்தண்டினின்று
மண்நோக்கி வீழ்கின்றன
நீர்த்துளிகளுடன் சில
கவிதைகளும்..

விடியலின் மின்தடைக்கு
விழி திறக்கையில்
எழிற்கூம்பின் வடிவொத்து
எரிசுடரின் கீழ்
உருகும் மெழுகினுடல்
உவமையாகிறதென்
அல்லித்தாளுக்கு...

ஒப்புமையின் உக்கிரம் தாளாது
உள்ளத்தின் பதியன்களை
அழுகையடக்கி அறுத்தெறிகையில்
அடித்தண்டில் சேறென
அப்பிக்கிடக்கும் வலியை
அகற்றும் திறனில்லை
எனக்கு.

- கௌரிப்ரியா.