Monday, July 25, 2011

தவறான கேள்விகளும் , சரியான பதில்களும்

ரோஜாப் பூவின் தாவரவியல் பெயர்?
(காதலியின் பெயர்)

மழை உருவாவது எங்ஙனம்?
அவள் கூந்தல் காற்றில் பரவும்வரை பொறுத்திருங்கள்.

இந்தியாவில் பாலைவனம் இருக்கிறதா?
அவள் பார்வை
எட்டாத தூரத்தில்
நின்று தேடுங்கள்.

ஒரு நிமிடத்துக்கு இதயம் எத்தனை முறை துடிக்கும்?
அவள் இருக்கையில் 144....
இல்லாதபோது 72...

ஆகஸ்ட் 6, வரலாற்றுக் குறிப்பு என்ன?
என் பிறந்த நாள்...
என் காதல் பிறந்த நாள்...
என் மனதிலும் இரோஷிமாவிலும் குண்டு விழுந்த நாள்.

சிந்து சமவெளி நாகரிகம் பற்றி எழுதுக?
அவள் இதழ் சிந்தும் சிரிப்புக்காக
இரண்டு முறை உடைமாற்றுகிறேன் வெட்கத்தை விட்டு வேறென்ன சொல்ல...

உலகின் ஏழு அதிசயங்கள் என்னென்ன?
முறைக்கத் தெரியாத கண்கள்
வாடாமல்லியாகிவிட்ட ஜாதி மல்லிகை
உதடு தொட்டும் உயிர் பெறாத கைக்குட்டை..
அவளைச் சுமந்து பல்லக்கு ஆகாத சைக்கிள்..
லவ் லெட்டெர் தராத உள்ளூர் இளைஞர்கள்..
மௌனத்துக்கும் அர்த்தம் கண்டுபிடித்த நான்
இதையெல்லாம்... கவிதையென்று தெரியாமலே பதிவு பண்ணுகிற என் டைரி

சல்ஃப்யூரிக் அமிலத்தின் குணங்கள் என்ன?
அவளின் கோபப் பார்வையில் பொங்கும்...
நுரைத்து தணியும்,
பின் அமிர்தமாகும்.

பிளாஸ்மா சவ்வூடுருவலை விளக்குக?
ஆயிரம் கண்கள் விலக்கி,
என் பார்வை மட்டும் உள்வாங்கும் அவள் இதயம்.

நிலவில் பிராணவாயு உண்டா?
சத்தியமாக உண்டு.
அவளே என் ஆக்ஸிஜன்!

-பாலா.

Wednesday, July 20, 2011

அரேபிய வாழ்க்கை.....


பத்தாம் வகுப்பு பெயில்
அரேபியாவில் இருந்து-என்அப்பா எழுதினார்
பாஸ்போர்ட்டிற்கு விண்ண்ப்பிக்கவும்
விமானமும் விசாவும் கிளர்ச்சியூட்டிய கனவுகளில்
பில்கேட்ஸ் பாவம் பிச்சைக்காரானாக
விழுவதற்குள் ஆவியாகும் பாலைவனத் தூறல்
போல்காணாமல் போனது கனவு!


கழிவறை சுத்தம் செய்யும் கைத்தொழிலொன்றில்
அப்பாவும் நானும் அழுக்கானதில்
சுத்தமானது - எங்கள்வீட்டு வறுமை!
ஆசையும் மோகமும் தொன்னூறு நாட்கள்
அரேபியன் கொடுத்த லீவு அறுபது நாட்கள்

எந்த விலக்கப்பட்ட கனியைத் தின்றோம்?
சபிக்கப்பட்டது எங்கள் இளமை!
வெட்கம் விலக்கி தொலை பேசிக்கும் தெரியாமல்
மனைவி தராத பதில் முத்தம்!
நானில்லை எனத் தெரிந்தும் நானாக இருப்பேனோ
சாயல் கண்டு ஏமாறும் தாயன்பு!
நெகிழ வைக்கும் மழலை கீதம்
நெஞ்சுருக வைக்கும் மரணங்கள்!


பிழைப்பு தேடிவாழ்வை இழந்தோம்.
விசா கடன் அடைக்கவே வேலை இருக்கு...
பிரியத்திற்குப் பட்ட கடன் அடைக்க வழி இருக்கா
நத்தைக் கூட்டிற்குள் நாலைந்து பேர்கள்
காய்ந்த ரொட்டியும் பாழாய்போன பசியும்!
நான் சகித்து சகித்து சம்பாதித்தவையெல்லாம்
அரை கிரெளண்டில் நிலமும் அதிலோர் வீடும்

வயதும், முகமும் வகுப்பும், படிப்பும்
சரியாய்த் தெரியாத குழந்தைகள் இரண்டு
சக்கரையும் அழுத்தமும் சரி விகிதத்தில்
வரவுக்ககாக வந்தோம் செலவாகிப் போனோம்
பிறிதொரு நாளில்மகன் எழுதினான்
"பத்தாம் வகுப்பு பெயில்"
நானும் எழுதினேன்
"பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கவும்"

-சேக் அப்துல்லாஹ்.

கவிதை இறகு - ஆடி


சாலை குறித்த பூர்வாங்க விவாதம்

சமையல்கட்டிலிருந்து சாப்பாட்டுக்கூடத்துக்கு
புத்தகஅலமாரிக்கு பூஜைரூமிலிருந்து
ஒவ்வொரு வீட்டின் வாசலிலிருந்தும் மற்றொன்றுக்கு
இன்னும்
தெருவுக்கு
தெருக்களுக்கிடையில்
ஊருக்கும் மயானத்துக்கும்
மயானத்திலிருந்து சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் தனித்தனியாய்
இந்த ஊருக்கும் அந்த பட்டணத்திற்கும்
கண்டங்களை இணைத்தும்கூட
கொடித்தடம் கோணவழி
ஒத்தயடிப்பாதை ஓடைக்கரை தங்கநாற்கர நெடுஞ்சாலையென்று
நீண்டுகிடக்கிற சாலைவசதி...

(இடைமறித்து)
அடீ செருப்பால,
அது என்னாடா பழையசோறு கெடாமப் பாத்துக்குற பிரிஜ்ஜா
இல்லே,படுத்துத்தூங்குற மெத்தையா...
சாலைங்கறது வசதி இல்ல...தேவை....

ஆமாமாம் தேவை.
மக்களின் கருத்தை மதித்து திருத்தம் ஏற்றுக்கொள்ளப்...

(மீண்டும் இடைமறித்து) மதிக்கவும் திருத்தவும் நீ யாருடா..
ஒழுங்கா பேசப்பழகு முதல்ல..

மகாஜனம் இப்படி குறுக்கிட்டால்
என் மனப்பாடம் மறந்துவிடும்

சரி... முழங்கு உன் பிரசங்கத்தை

அனேகப்பாதைகளிருந்தாலும்
குண்டுங்குழியுமற்றதொரு பாதையே நம்தேவை
ஆனால் அதற்கு ஜல்லியும் தாரும் வேண்டுமே

மக்கு மக்கு... ரெண்டையும் கலந்து அந்தரத்தில போடுவியா ரோடு...?
நிலம் வேணும்டா நிலம். அதாவது மண்...

ஆமாமாம், அடங்காம துருத்திக்கிட்டு எழும்புறதையெல்லாம்
அங்குலம் அங்குலமா உள்ளழுத்தி சமப்படுத்த
ஒரு ரோலரும் தேவை.

இத்தனையிருந்தாலும் போதாதப்பா அறிவாளி
காலில் சாக்கு கட்டிக்கொண்டு
ராவும்பகலும் தார்ச்சூட்டில் வேக எங்களாட்டம் ஆட்களும் தேவை.

- ஆதவன் தீட்சண்யா.

Thursday, June 16, 2011

தற்போதைய சந்தை நிலவரம்


தற்போதைய சந்தை நிலவரம்

லெனினை வாங்கியாகிவிட்டது,
சே' ஏற்கனவே
பிராண்ட் நேமில் இருக்கிறார்,
காந்தியை உருவாக்கியவர்களே
அவரைக் கொன்று விட்டனர்,
சதாமை தூக்கிலிட்டு அழித்தாயிற்று,
கடாஃபிக்கெதிராக சிலுவைப்போர்
நடந்து கொண்டிருக்கிறது,
லேடனைக் கண்டுபிடித்துவிடலாம்,
---
ஜூலியன் அஸாஞ்சே'வை
மட்டும் என்ன செய்வது
என்றுதான் தெரியவில்லை...!


-சின்னப்பயல்.

கவிதை இறகு - ஆனி

"வானவில் கனவுகளின் வரவேற்பு வளையம்"
"இல்லை! மேகத்திற்கான வேகதடை"
-
"நான் மழையின் ரசிகன்"
"நீ மழைக்கு ஒதுங்க வீடிருக்கிறது.
ஆனால்
மழை ஒதுங்கத்தான் என் வீடிருக்கிறது!"
-
"ஷெல்லி
மில்டன் படித்ததுண்டா?"
"அவர்கள் படித்தார்களா என்று
எனக்குத் தெரியாது"
-
"கை நாட்டா?"
"நாட்டின் கை"
-
"சங்கீத ஞானமுண்டா?"
"பஞ்சப்பாட்டு தெரியும்"
-
"குரு யார்?"
"வேர்க்குரு"
-
"உன் பெற்றோர் நாட்டுக்கு
என்ன செய்தார்கள்?"
"என்னைச் செய்தார்கள்"
-
"நீ என் மயிருக்குச் சமம்?"
"வெட்ட வெட்ட துளிர்ப்பதால் சொல்கிறாயா?"
-
"இவ்வளவு திமிராக்ப் பேசுகிறாயே
உன்னைப் பற்றிச் சொல்"
"உனைனப் பற்றியும் சொல்கிறேன்
நீ
ஓய்வூதியம் பெறுகிறவன்
நான் உழைப்புக்கே
ஊதியம் கிடைக்காதவன்!"

-கவிஞர் விவேகா.
'உயரங்களின் வேர்'

Thursday, May 19, 2011

சூரியக் கம்புகள்

பண்டுபண்டொரு காலமிருந்தது
சின்னச்செடியைப் பறிக்கமுயன்றால்கூட
கதிர்கம்பெடுத்து அடிக்க வருவாளாம் காட்டுக்கிழவி

பட்சி பறவைகள் படுக்க மடிகொடுத்து நிற்கும் மரம்
அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நிற்கும் கருடக்கொடி
விஷம் முறிக்க வளரும் வேர் பறிக்க
மரம் செடி கொடிகளிடம்
உத்தரவு கேட்டு நிற்பான் மூப்பன்

கொடுங்காற்றாய் வரும் மந்திரமூர்த்தி

ஒரு வேர் பிழுதால்
ஐந்து மரம் செடி கொடிகளை நட்டுவைக்கச் சொல்லி
பயமுறுத்திச் செல்வான்

புராதனமக்களின் தெய்வங்கள்
மரம் செடி கொடிகளாய் வளர்வதுண்டு

எந்தக் கிளை அல்லது கொடி சாபமிட்டதோ

மலைகளைச் சுரண்டித் தின்னும் மானங்கெட்ட ராச்சியத்தில்
காய்ந்த சுள்ளிகளாய் நீண்டு குத்துகிறது
சூரியக் கம்புகள்.

-என். டி. ராஜ்குமார்.

கவிதை இறகு - வைகாசி


கிழிந்ததன் நகலாய்

கடிதம்கண்டேன்.
கிழிந்துபோன வாழ்க்கையின் நகலாய்.

எண்ணெய்பிசுக்கேறிய காகிதத் துண்டில்
பழைய பற்றுவரவேட்டில் கிழித்தெடுத்ததாயிருக்க வேண்டும்.
பாதி பேனையாலும், பாதி பென்சிலாலும் எழுதப்பட்டிருந்த
நலம் விசாரிக்கும் வரிகள்
என் கைகளில் நடுங்கின.

பிசுக்கில் பதிந்திருந்த பெருவிரல் ரேகையை
உருப்பெருக்கிப் பார்ப்பதென
எழுதப்படாத துயரங்களை வரைபடம் போடுகிறது மனம்.

பிரச்சினைகளின் பூதாகாரத்துள்
கீச்சிடலுமின்றி சிறுபூச்சிகளாய் நசித்துக் கிடக்கும்
துயரங்கள் உங்களுக்குள்ளும்தான்; எங்களுக்குள்ளும்தான்

நாலுதிக்குக்கொரு உடைவாகிப்போயின நம் உறவுகள்
ஆயினும் அதிசயம்தான்
நாமும் உயிர்கொண்டு ஊர்கின்றோம்
காலொடிந்த நண்டினைப் போல்.
கரைதான் தென்படவில்லை.
தென்படுவதாய் தெளியும் பொழுதெல்லாம்
திசைமுகத்தில் பீச்சியடிக்கும்
கணவாய்மைபோலும் கறை.

கறைபடிந்த துயரத்தின் நடுவே
நாளும் நாளும் காணாமல் போகிறோம்;
இல்லையா?

இருகரையும் துயரெறிகை
உங்களைப் போலவேதான் எங்களதும்
எங்களைப் போவேதான் உங்களதும்
திரையெறியும் துயரம் இருகரையிலும்தான்.

அன்றோர் காலை
நாவெண்டாமுனையில் மீன்வாங்க நின்றிருந்தோம்
அக்கரையின் வான்பரப்பில் இரைச்சலோடு எழுந்து பறந்தன
இயந்திரப் பறவைகள்; குண்டு பீச்சிகள்.

கொட்டடிப் பக்கமாய்
கொழுந்துவிடடெரியுதென்றார்
பக்கத்தில் நின்றிருந்த முதியவர்
திசைமுகம் புகைமண்டலமாய்த் தெரிந்தது எமக்கு.
குருதிபடிந்த காலையாயிருந்திருக்கும் உங்களுக்கு.

பதறியவாறே வீட்டிற்கு வந்து
"குரலை" முறுக்கினேன்
சற்றுமுந்திய செய்திகளின்படி கொட்டடியிலும், கச்சேரியடியிலும்
குண்டு வீச்சென்றார்
சேத விபரம் தெரிந்தபின்னால் தான்
சிறிது மூச்சுவிட்டேன்.

இப்பாலிருந்து
மண்டைதீவின் பீரங்கிகள் முழங்கும் போதெல்லாம்
எங்கள் நெஞ்சு பதறும்
குண்டுவீச்சின் போதெல்லாம்
எங்கள் வீட்டின் நிலைக்கதவுகள், சன்னல்கள் மட்டுமல்ல
கூடவே எமது உணர்வுகளும் அதிர்வுறும்.

உற்றதுயர் சொல்லியழ
உரத்துப் பேச
ஒரு மனுவில்லாத் தனிக்காட்டில்
சிறகொடுக்கி குரலொடுக்கி
சீவியத்தைச்சிறைப்படுத்தி
பாடாய்ப்படுத்துகிற பாழும் மனத்தோடு போராடி
கிழிந்துபோன வாழ்வின்
இக்கரை நகலாய் நாங்கள்

எங்களதைப்போலவேதான் உங்களதும்
உங்களதைப்போலவேதான் எங்களதும்

யுத்தமுனைகளால் கிழிக்கப்பட்டு
குருதிப் பிசுக்கேறிப்போன வாழ்வின்பக்கங்களில்
எழுதப்படுமா ஒரு நற்செய்தி?

தெளிவற்றதாயிருக்கும் உங்கள் கடிதத்தின் வாசகங்கள்
மீண்டும் ஒருமுறை குரல்வழியாய் நடுங்குகின்றன.

எல்லாமே தெளிவற்றிருக்கிறது
ஆயினும்
ஒரு தீக்குச்சி உரசலின்
சிறு நம்பிக்கைத் துளியில் தெரியவரும் நற்செய்திக்காய்
காத்திருத்தல் மட்டும் தொடரும்.

காத்திருப்போம்
எல்லாத் துயரங்களின் நடுவிலேயும்.
தீக்குச்சியிலும் ஈரம்படிந்துவிடாதவாறு காப்போம்.

-சு.வில்வரெத்தினம்
"காற்றுவழிக் கிராமம்"