Friday, February 12, 2010

தொக்கி நிற்கும் கேள்விகள்

சோகங்களின் சுமை கூடும்போது
புல்லாங்குழலிசை கேட்பாயா
பூச்செடிகளுக்கு நீருற்றுவாயா?

கடிதத்தில் சில இடங்கள்
கலங்கியிருந்தனவே அழுதாயா?

வடுக்களில் சூடுபட்டால்
வலிக்குமா முன்போல்?

எப்போது பழகப்போகிறது மனம்
ஆளில்லாத வீட்டின் பூட்டை
இழுத்துப் பார்க்காமல் திரும்புவதற்கு.

இப்போதும்
திரும்பிப் பார்க்கிறாயா
என் பெயர் சொல்லி
பிறர் அழைத்தால்...

கண்ணில் படாமல்
இருந்திருக்கக் கூடாதா
புயலில் இறந்தோர் பட்டியலில்
உன் சாயல் புகைப்படம்.

நீ வரும் நாளில்
எப்போதும் போல்
வாசல் திறந்திருக்கும்
நான் இருப்பேனா
எதிர்கொண்டு வரவேற்க...

நேற்று பெய்த மழையில்
நனைந்தாயா?
எனக்கு ஜலதோஷம்.

சொல்ல மறந்த
பிறந்தநாள் வாழ்த்தைவிட
சுமையானதா...
வெளிசொல்லாத நேசம்?

அஞ்சல் நிலையத்திலும்
தெரிவிக்க வில்லையா?
உன் முகவரி மாற்றத்தை...

பிளாஸ்டிக் பூவைச் சுற்றிய
வண்ணத்துப் பூச்சி
உன் அன்புக்கு ஏங்கிய நான்
அதிகம் ஏமாந்தது யார்?

குமுறல்களை
அதிகம் பகிர்ந்துகொள்வது
தலையணையா
கவிதைகளா..?

எடைக்குப் போயிருக்குமோ..?
பரண் மேல் கிடந்த
பழைய புத்தகத்தோடு
ஸ்டிக்கர் பொட்டும் ரோஜாவும்...
-துறையூர் மணி.

சாமி செய்வது தப்பில்லையா

நெருப்பு ஏன் சுடுகிறது

சுடக்கூடாது என்று அதற்கு யாரும்
ஏன் சொல்லித் தரவில்லை

கடல் உப்புக் கரிக்கிறது
மீன் ஏன் கரிப்பதில்லை

தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்
சரி சாமி செய்வது தப்பில்லையா

குழந்தைகள் பேசிப் பேசி
பெரியவர்கள் ஆகிறார்கள்
-ரமேஷ் பிரேம்.

கவிதை இறகு -மாசி

நிகழ்விடம் சென்று
அமர்ந்தாயா?
காட்சிகள் கண்டு
களித்தாயா?
அமைதியாய் இருந்து
வந்தாயா?
இல்லையென்றால்
நீ
அங்கில்லை
ஆம் என்றால்
நான் இங்கில்லை.

-ஆனந்தி
"தானாய் கழிந்தது பொழுது"

Wednesday, February 10, 2010

மின்மினிகளால் ஒரு கடிதம்

எரிவதில் உள்ள
சுகம்
விட்டிலுக்குத்தான் தெரியும்
எனக்குத் தெரியும்
உன்னைக் காதலிப்பதென்பது
என்னைச் சிலுவையில்
அறைந்துகொள்வதாகும்
ஞாபகங்கள்
உனக்கு ஒற்றடை
எனக்கு வீடு
வா, மறதியின் இருட்டில்
ரகசியமாய் சந்திப்போம்
உன் கண்களுக்கு அஞ்சி
என் இதயத்தைக்
காயத்திற்கு அடியில்மறைக்கிறேன்
மேகமாகி
உன்னைப் பிரிவதும்
நதியாகி
உன்னைத் தேடி வருவதும்
எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.
நீ என்
சூரியனுக்கும் மலர்வதில்லை
சந்திரனுக்கும் மலர்வதில்லை
நீ ஒரு வாழைப் பூ
-கவிக்கோ அப்துல் ரகுமான்.

Tuesday, February 9, 2010

திறக்கப்படாத கதவின் முன்

திறக்கப்படாத கதவின் முன்
நெடுங்காலமாய் காத்திருக்கிறாய்
கதவின் பின்புறம் அவ்வப்போது
உறும்
பேச்சொலிகளும் சிரிப்பொலிகளும்
அங்கு யாருமில்லை எனக்
கருதவிடாது பார்த்துக் கொள்கின்றன
அயர்விலும் ஆற்றாமையிலும்
திரும்பச் செல்ல
எத்தனிக்கும் கணந்தோறும்
கதவு நோக்கி வரும் காலடியோசையொன்று
உன் காத்திருப்பின் எல்லைகளை நீட்டிக்கிறது
திறக்கப்படாத கதவின் முன்
நெடுங்காலமாய்க் காத்திருக்கிறாய்
-இளங்கோ கிருஷ்ணன்.

Tuesday, February 2, 2010

உங்க மனசாட்சிய கொல்லலையா?

வன்னி முகாம் ஓரத்தில
முள்ளுக் கம்பி கக்கத்துல
ஏங்கி நிக்கும் பிஞ்சு முகம்
உங்க மனசாட்சிய கொல்லலையா?

ரெண்டு பக்கம் துப்பாக்கி
நடுத் தெருவுல நிப்பாட்டி
வெந்த சோறு திங்கச் சொன்னா
நெஞ்சுக் கூடு தாங்கிடுமா?

முள்ளுக் கம்பி நடுவினிலே
கொஞ்சம் நாள் வாழ்ந்திடுங்க
அவங்க வெச்ச கன்னி வெடி
சாகாம நிக்குதுன்னு சொன்னிகளே

கன்னி வெடி வாழுமிடம்
நஞ்சு குஞ்சும் அறிஞ்சிடுமே
இருபத் தஞ்சு வருச கால
வாழ்க்கை யெல்லாம் இங்கேதான்!
துள்ளி வரும் ஆட்டுக்குட்டி
ஊஞ்சல் கட்டி ஆடுமிடம்
ஊருணிக்கர மீன் குஞ்சு எல்லமே
நாங்க இல்லாம தேடிடுமே!

வயது வந்த செல்லமக
அவசரமா ஒதுங்கி நிக்க
இருட்டும் வரை காத்திருந்தா - அவ
அடி வயிறு தாங்கிடுமா?
மாற்றம் வரும் என்று
வட்ட முரசறைந்து சொன்னிங்களே
மாற்றம் ஏதும் இங்க இல்ல
மக்க மனசொடஞ்சு போனோமே?

நேற்று தடுத்தாண்டு கொண்டிகளே
கையில் தட்டேந்த வச்சிகளே
தம்பி தங்கை தொலைத்த நாங்கள்
சொந்த வீடு போவதெப்போ?

அழிஞ்ச சனம் மீதம்போக
மிஞ்சி வாழும் எங்கசனம்
சொந்த மண்ணில் உயிர் போக
சாவு பிச்ச கேட்குறோமே?!!
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

பிழை திருத்தம்

பிழை திருத்தம்

தொல்காப்பியத்தில்
பிழை திருத்தம்
திணைகள் ஆறு
கொய்தல் திணை
முள்ளும்... முள்வேலிசார்ந்த இடமும்.

புறநானூற்றில்
பிழைதிருத்தம்
‘யாதும் ஊரே’
சிங்களம் தவிர...
‘யாவரும் கேளிர்’
சிங்களனைத்தவிர...

இந்திய விடுதலைப்போருக்கும்
ஈழ விடுதலைப்போருக்கும்
சிறு வேறுபாடுதான்
இந்திய விடுதலைப்போரில்
தமிழன் இந்தியனாகி மடிந்தான்
ஈழப்போரினால்
இந்தியன் தமிழனாக மலர்ந்தான்.

-அய்யாறு ச.புகழேந்தி.