Tuesday, February 2, 2010

உங்க மனசாட்சிய கொல்லலையா?

வன்னி முகாம் ஓரத்தில
முள்ளுக் கம்பி கக்கத்துல
ஏங்கி நிக்கும் பிஞ்சு முகம்
உங்க மனசாட்சிய கொல்லலையா?

ரெண்டு பக்கம் துப்பாக்கி
நடுத் தெருவுல நிப்பாட்டி
வெந்த சோறு திங்கச் சொன்னா
நெஞ்சுக் கூடு தாங்கிடுமா?

முள்ளுக் கம்பி நடுவினிலே
கொஞ்சம் நாள் வாழ்ந்திடுங்க
அவங்க வெச்ச கன்னி வெடி
சாகாம நிக்குதுன்னு சொன்னிகளே

கன்னி வெடி வாழுமிடம்
நஞ்சு குஞ்சும் அறிஞ்சிடுமே
இருபத் தஞ்சு வருச கால
வாழ்க்கை யெல்லாம் இங்கேதான்!
துள்ளி வரும் ஆட்டுக்குட்டி
ஊஞ்சல் கட்டி ஆடுமிடம்
ஊருணிக்கர மீன் குஞ்சு எல்லமே
நாங்க இல்லாம தேடிடுமே!

வயது வந்த செல்லமக
அவசரமா ஒதுங்கி நிக்க
இருட்டும் வரை காத்திருந்தா - அவ
அடி வயிறு தாங்கிடுமா?
மாற்றம் வரும் என்று
வட்ட முரசறைந்து சொன்னிங்களே
மாற்றம் ஏதும் இங்க இல்ல
மக்க மனசொடஞ்சு போனோமே?

நேற்று தடுத்தாண்டு கொண்டிகளே
கையில் தட்டேந்த வச்சிகளே
தம்பி தங்கை தொலைத்த நாங்கள்
சொந்த வீடு போவதெப்போ?

அழிஞ்ச சனம் மீதம்போக
மிஞ்சி வாழும் எங்கசனம்
சொந்த மண்ணில் உயிர் போக
சாவு பிச்ச கேட்குறோமே?!!
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

பிழை திருத்தம்

பிழை திருத்தம்

தொல்காப்பியத்தில்
பிழை திருத்தம்
திணைகள் ஆறு
கொய்தல் திணை
முள்ளும்... முள்வேலிசார்ந்த இடமும்.

புறநானூற்றில்
பிழைதிருத்தம்
‘யாதும் ஊரே’
சிங்களம் தவிர...
‘யாவரும் கேளிர்’
சிங்களனைத்தவிர...

இந்திய விடுதலைப்போருக்கும்
ஈழ விடுதலைப்போருக்கும்
சிறு வேறுபாடுதான்
இந்திய விடுதலைப்போரில்
தமிழன் இந்தியனாகி மடிந்தான்
ஈழப்போரினால்
இந்தியன் தமிழனாக மலர்ந்தான்.

-அய்யாறு ச.புகழேந்தி.

Thursday, January 28, 2010

செல்லம்மா

டீ கடை வெப்பப் பாய்லர்
அருகே..

ஒரு நெளிந்த 'தம்' மின்
உச்சித் தலை எரிய..
நீ
வட்டமிட்டு அனுப்பிய வளையங்களில்..

நிக்கோடின் வாசமோ..
பிரவுன் நிற காரமோ..
பயணமாகிறது..

சாலை கடக்கக் காத்து நிற்கும்..
பள்ளிச் சிறுமியின்..
பச்சை ரிப்பனிலும்..
நாசித் துளையிலும்..
-இளங்கோ
வீதிகளும் வீடுகளும்
அடை மழையின் உச்சத்தில்
வீதிகளில் தண்ணீர்
நிரம்பியிருந்தது.

வீடுகளோ ஏரிகளை
ஆக்கிரமத்திருந்தன.
-பா.சதீஸ் முத்து கோபால்.
கட்டை விரல் பகுதியில்
தேய்ந்தும்,
மற்ற விரல்கள் பகுதியில்
அச்சு பதிந்தும்,
உழைத்து நிறம் மங்கிய
அப்பாவின் காதி செருப்பால்
பக்கத்தில் பளபளக்கிறது
மகனின் ரீபோக்.

ஒன்றில் சற்றே
வார் அறுந்த வுட்லாண்ட்ஸ்.
இன்னொரு காலில்
தையல்கள் சந்தித்த
ரப்பர் செருப்பு என
வறுமையிலும் சமத்துவத்தை
பறைசாற்றி அலைகிறான்
பேப்பர் பொறுக்கும் சிறுவன்.


இருச்சக்கர விபத்து,
கடற்கரை களிப்பு,
கலவர துப்பாக்கிச்சூடு,
ஜோடி மாறிடும்
திருமண வீடு,
தேய்ந்துவிட்ட அலட்சியம்...
என நிகழ்ந்த சம்பவத்தின்
மௌன சாட்சியாய் இருக்கிறது
ஒவ்வொரு ஒற்றை செருப்பும் !
- சஜயன் . பெண்ணுரிமை பேசிக் கொண்டிருக்கிறான்
பாரதி
பின்புலத்தில்
புடவையை தோளைச்சுற்றி
இறுக்கிக் கொள்கிறாள் செல்லம்மா.
- லதாமகன்.

Friday, January 22, 2010

நீ என்னிடம் பேசியதை விட...

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை
"எனக்கு மட்டும்" என்று
குவிகிற
மையத்தையே
காம்பாக்கி கொண்டு
"வெளி"வாங்கிப்
பூக்கிறது
நட்பு.
-அறிவுமதி.

Thursday, January 21, 2010

சாலையோரம்

பிசாசு எழுதிய கவிதையாய்
தலைவிரித்து இலைகளின்றி மரம்.
கருத்த இருள் கவிய
இருக்கும் ஒளியும் பயமாய் ஒதுங்கும்.
தூரத்து மலைகளில் மினுக்கும் வீடுகளில்
பேய்களோ வசிக்கும் ?

வராத பஸ்.
காத்திருக்கும் நான்.
அருகிலே என்நண்பன்
ஒண் டூ திரீ
ஃபோர் பை சிக்கனா
உங்கப்பா எங்கப்பா
எருமக்கடா

தொந்தரவு செய்யும்
நண்பனில்லாத வாழ்க்கை நரகம்

-டி.பிரியா.

'வெட்கம்' என்றும் வரலாம்

பெண்கள் விடுதிகள்
நிறைந்த தெருவைக்
கடந்து செல்லும்
ஆணின் இதழ்களில்
தானாக வந்தமரும்
குறுநகையை
மொழி பெயர்த்தால்
'வெட்கம்' என்றும் வரலாம்
-சேரல்.

எளிமை

எனது இருப்பை அறிவிக்க
ஒரு சிறு கூவல்.
நான் இங்கு இருந்ததை கூற
ஒற்றைச்
சிறகுதிர்ப்பு
இனியும் இருப்பேன்
என்பதன் சாட்சியாய்
அடைகாத்தலின்
வெம்மை
எப்படி இயல்கிறது
பறவைகளுக்கு
இத்தனைச் சுருக்கமாய்
தங்கள் வாழ்வினை கூற?
- பி. பி. இராமசந்திரன்