Saturday, August 8, 2009

வெறி கொண்ட புயல் நின்று......

சிறுநண்டு மணல் மீது
படம் ஒன்று கீறும்;
சிலவேளை இதை வந்து
கடல் கொண்டு போகும்.

கறிசோறு பொதியோடு
தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட
பயம் ஒன்று காணும்.

வெறுவான வெளி மீது
மழை வந்து சீறும்
வெறி கொண்ட புயல் நின்று
கரகங்கள் ஆடும்.

நெறி மாறுபட நூறு
சுழி வந்து சூழும்
நிலையான தரை நீரில்
இலை போல் ஈடாடும்.

இருளோடு வெளியேறி
வலை வீசினாலும்
இயலாது தர வென்று
கடல் கூறல் ஆகும்.

ஒரு வேளை முகில் கீறி
ஒளி வந்து வீழும்
ஒரு வேளை துயர் நீள
உயிர் வெந்து சாகும்.

-மஹாகவி.

நீ சிரிக்கையில் நடக்கும் திருவிழாக்களில்...

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.

-பிரமிள்.
நீ
சிரிக்கையில் நடக்கும்
திருவிழாக்களில் நான்
வழி தப்பும்
குழந்தையாகிறேன்.

-கலாப்ரியா.
காற்றில் வாழ்வைப் போல்
வினோத நடனங்கள் புரியும்
இலைகளைப் பார்த்திருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும்
இலையைப் பிடிக்கும்போது
நடனம் மட்டும் எங்கோ
ஒளிந்து கொள்கிறது.

-தேவதச்சன்.
வற்றிபோவதானாலும்
எனக்கு
என் ஓடையே போதும்
உன் கண்ணாடித்
தொட்டியில்
நீயே இரு.

-இரா.பச்சியப்பன்.
"உனக்குப் பிறகான நாட்களில்"


அன்பு
என்ற தலைப்பில்
மிகச்சிறிய
கவிதை கேட்டார்கள்....
அம்மா
என்றேன் உடனே!

கேட்டது
அம்மாவாக இருந்தால்
இன்னும் சின்னதாய்
சொல்வேன்

நீ....என்று!

-தாஜ். நாற்சந்தி நிறுத்தங்கள்
மேம்பாலங்களில் மறைந்தன
போக்குவரத்து லேசானது
செய்தித்தாள் விற்கும் சிறுவன்
சில்லறை சேகரிக்கும் சிறுமி
வாழ்க்கை கனமானது.

-எம்.ஏ.அப்துல் ரஹீம். தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்
திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவே
எந்தக் கடிதமும் இல்லாத
ஏமாற்றம்.
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு
இறகு மட்டும்
எந்தப் பறவைஎழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.

-கல்யாண்ஜி. ஓய்வும் அழகும் ஆனந்தமும் தேடி
மேற்குநோக்கி நடந்த எனது மாலை உலாவினால்
சூர்யனை அஸ்தமிக்கவிடாமல் காக்கமுடிந்ததா?
தோல்வி தந்த சோர்வுடன்
ஓய்வுஅறை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தேன்.

ஒரு காலத்தில் பூக்களாய் நிறைந்திருந்த மரம்
இன்னொருகாலத்தில் கனிகள் செறிந்திருந்த மரம்
அன்று பறவைகளாய்க் காய்த்து
இருட்டில் செய்வதறியாது
கத்திக் கொண்டிருந்தது.

ஒரு நண்பனைப் போல்
சூர்யன் என்னைத் தொட்டு எழுப்பிய காலை
வானமெங்கும் பறவைகள் ஆனந்தமாய்ப் பரவ
மெய்சிலித்து நின்றது அந்த மரம்.

.-தேவதேவன். எதைப் பற்றியும் எழுதுகிறாய்
என்னை பற்றி எழுதேன்
தினம் தினம் கெஞ்சுவாய்
மழையில் நனைவது சுகமா
மழை பற்றி எழுதுவது சுகமா?

-வெண்ணிலா.

Friday, August 7, 2009

காதலின் பெயரால்.....

மேகத்தை அடையாளம் வைத்து
ஆட்டுக்குட்டியை விட்டுப் போனவன்
கதையை நீ சொல்லக் கேட்டு சிரித்தேன் .....
அதேபோலொரு மேகத்தின் கீழ்
என்னை நிற்க வைத்துப்
பேசிகொண்டிருப்பதை உணராமல் .....
உன்னை சிரிக்க வைப்பதற்காக
மீசையை சிரைத்துக் கொண்டேன்
என்னை பார்த்துப் பலரும்
தலையிலடித்துக் கொண்டார்கள்
பழந்துணிகளை சேகரித்து
கோமாளியாகக்கூட
வேஷம் போட்டிருக்கிறேன்
உன் பொழுது கலகலப்பாக போக...
என் பிழைப்பு நாறிக் கொண்டிருப்பது தெரியாமல் .....

என்னை உனக்காகக் கடலுக்குள்
கரைத்து கொண்டிருந்தபோது
நீ ஆவியாகி மேகத்தை அடைந்திருந்தாய் ....
மழையாவதே உன் லட்சியம்
என் மூளையை
உனக்காக செலவழித்தேன்
உன் மூளை மூலதனமாகியிருந்தது

என்னை கவசமாகிக் கொண்டு
நீ போரிட்டாய்
உன் ராஜியத்தை அடைந்ததும்
என்னை பழைய கடையில்
எடைக்கு போட்டாய்....
காதலின் பெயரால்
நான் முட்டாளானபோது
யதார்தத்தின் பெயாரால்
நீ மேதையாகியிருந்தாய்
. -கவிஞர் தாமரை.

நீ...நான்...மற்றும்...

வார்த்தைகளின் உறைதலில்
உனக்குள் கிட்டித்துப் போன மௌனம்
பனிகாலத்தில் திறக்காத கதவுகள்

என்னுடையதோ ஒரு தவம்
நினைந்து காக்க முயன்றாலும்
விரலிடுக்கில் சிறைப்படாத புகை

நீ ஒன்று செய்யேன்
மௌனத்தின் தடங்கள்
மெல்ல பிடிபட வேண்டின்
சப்தங்களிலிருந்து மீளப்
பழகிக் கொள்ளேன் .

-நீ...நான் ...மற்றும் ...
தி .சந்தானம் .

வாழ்க்கை

ஏன் எதற்கு
என்பது தெரியாது
எனினும் நிகழ்ந்துவிட்டது

ஏன் எதற்கு
என்பது விளங்காது
எனினும் நிகழ்கிறது

ஏன் எதற்கு
என்பது புரியாது
எனினும் நிகழும்

Wednesday, August 5, 2009

பொருள்வயின் பிரிவு

அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை.
நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது
சாரல் மழைபெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது

அயர்ந்து
தூங்கிக்கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்

இவள்
வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்துவைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல

முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்கு பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்து வந்துகொண்டிருந்தேன்
மனசு கிடந்து அடித்துக்கொள்ள.

-கவிஞர் விக்கிரமாதித்யன்.

Monday, August 3, 2009

‘அந்நியமற்ற நதி ‘

நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.

-கல்யாண்ஜி .